தட்டிவான் பயணங்கள்

369

இலங்கைக்கு சென்று திரும்பிய நண்பரொருவர் தன் பயண அனுபவங்களை கூறுகையில், தான் பயணித்த வானூர்தியை “தட்டிவான்” என்றார். அந்தக் கணத்தில் என்னைத் “தட்டி” எழுப்பி, “வான்”பாயும் அளவுக்கு “தட்டிவான்” பயண நினைவுகள் இல்லை என்றாலும் சுனையாக சில நினைவுகள் ஊறத் தொடங்கின..

பள்ளிக்கூட வாங்குகளை அசைக்க முடியாமல் பொருத்தியது போல் இருக்கைகள்.. தோட்டக் காற்றும் கடலலையும் உடலை வருடும் விதத்தில் திறந்த யன்னல்கள் இரு பக்கமும்.. சங்கிலியால் இணைக்கப்பட்டு தொங்கும் பலகை பின்பக்கம்.. மூக்குக் கண்ணாடி போட்ட முதியவர் தோற்றம் முன்பக்கம்..

பின்னால் தொங்கும் பலகையில் அமர்ந்திருக்கும் கூட்டத்தோடு தொங்கும் வாழைக் குலைகள் மங்கள வரவேற்பை குறியீடு செய்யும்.

கூரையின் மேல் அடுக்கப்பட்டிருக்கும் சருவப்பானைகளும் பெட்டி, கடகங்களும் சும்மாடு சுமக்கும் அம்மையை நினைவூட்டும்..

அதே அன்னை அணைப்புடனும், மங்கலகரமான பயணம் அமையும். பெரும்பாலும் தெல்லிப்பளை அம்மனுக்கும் சன்னதியான் சன்னிதிக்கும் வல்லிபுரத்தாழ்வான் காலடிக்கும் செல்ல தட்டிவான் ஏறுவதால் பயணமும் தெய்வீக மனம் தரும்..

இங்கிலாந்தில் பிறந்தாலும் இலங்கையின் வடக்கில் தட்டிவானாக வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதை எம்மூர்க்காரரால் மட்டுமல்ல, சாவகச்சேரி கொடிகாம வழித்தடப் பயணிகளாலும் மறக்க இயலாது..

உங்களாலும் மறக்க இயலாத தட்டிவான் பயணங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..