நாள் : 15
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 5
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பது பழமொழி.
இங்கே மழையையும் அதேபோலச் சொல்கிறார் வள்ளுவர்.
கெடுப்பதுவும் மழை; கெட்டுப்போனவைகளின் சார்பில் நின்று மீண்டும் அவற்றைத் தலையெடுக்க வைப்பதுவும் மழை என்கிறார் வள்ளுவர்.
காரி என்பது மழையின் இன்னொரு பெயர். காரி என்பது ஜோதிட சாத்திரத்தில் சனி கிரகத்தின் இன்னொரு பெயரும் கூட.
கூடவே ஜோதிடத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு.
சனியைப் போல கெடுப்பாருமில்லை. சனியைப் போல கொடுப்பாருமில்லை. சனியை தர்மக் கிரகம் என்று சொல்லும் ஜோதிட சாத்திரம். மழையும் அப்படி ஒரு தர்மவான்தான். சனியின் ஆதிக்கம் ஆயுள். சனி ஆயுள்காரகன். மழையும் ஆயுள் வளர்ப்பதுவே.
அதுசரி ஏன் கெடுப்பதை முன்னே வைத்து பின்னே கொடுப்பதை வைத்தார்?
மழை எப்பொழுதுமே பருவ ஆரம்பத்தில் மிக அதிகமாக இருக்கும். இருக்க வேண்டும். இது பலவற்றை அழித்துவிடுகிறது. சேதமடைந்த கட்டிடங்கள், வலுவற்ற மரங்கள், ஆற்றுப்படுகைகளில் படிந்து கிடக்கும் மணல் இப்படி எல்லாவற்றையும் அழிக்கிறது.
அதன்பின் அடைமழை ஆரம்பம் இம்மழை புதிய படைப்புகளை ஆரம்பிக்கிறது. நமது நாட்டில் மழை ஆரம்பம் ஆவது வைகாசி பிற்பகுதியில் ஆனால் நாம் விதைப்பது ஆடிமாதம். அதாவது முதலில் பெருமழை பழையதை அழிக்க, நிலத்தை பக்குவப்படுத்தி மீண்டும் படைப்பு தொடங்குகிறது. பழைய தலைமுறை அழிந்து புதிய தலைமுறை தழைத்தோங்குகிறது. மழையே பழைய தலைமுறையை கெடுக்கிறது. அதே தாவரங்களின் புதிய தலைமுறைகளையும் ஆக்குகிறது.
ஆக பழையன கழிதலும் புதியன புகுதலும் மழையின் கைவண்ணங்கள். இதுவே வளர்ச்சி என்பதாலே…
எல்லாமே மழைதான் என்று முற்றுப்புள்ளி வைக்கிறார் வள்ளுவர்.