வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
எழுதிய கண்ணதாசனே விடையாகவும் உள்ளார். ஆம்.. அவர் வாழ்ந்த வாழ்க்கை கடைசிவரை அவருடன்.. அனைவருக்கும் இது பொருந்தும்.
அவ்வாறு கடைசி வரை நம்மோடு வரும் நம் வாழ்க்கையை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றுபவை கல்விச்சாலைப் பயண அனுபவங்கள். அவ்வறிவனுபவங்களை அளிப்பவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள். அவ்வாறான பெருந்தகைகளில் ஒருவர்தான் திருவாட்டி பத்மநாதன்.
இன்றைய என்னிலையை சற்றுப் புரட்டிப் பார்க்கையில் பலதுகள் அவர் விதைத்ததாகவே உள்ளது. குறுகிய காலத்தில் பலதை விதைத்த அந்த ஆளுமை மீதான வியப்பு மீண்டும் மீண்டும் மிகுகிறது.
கண்டிப்பும் கனிவும் குழைத்துச் செய்த முகத்தில் மாட்டிய மூக்குக் கண்ணாடியூடு எம்மை ஊடுறுவி, எமக்குள்ளிருந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்ததோடு, தன்னாற்றல்களையும் எமக்கு ஊட்டிய பெண்மணி.
கி க்கு விசிறி எங்கே தொடங்கும் தி க்கு விசிறி எங்கே தொடங்கும் கொம்பு எந்தளவில் உயர வேண்டும் என தமிழ் எழுத்து நேர்த்தியை புகட்டியதன் மூலம் செவ்வன செய்தலை எமக்குள் புகுத்திய சீமாட்டி அவர்..
ஒரு செயலை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்தவர், ஒரு செயலை எவ்வாறு சிறப்பாகச் செய்விப்பது என்றும் செய்து காட்டிப் படிப்பித்தவர்.
மிக நெருக்கமாக நாற்பது வரையானோர் விறாந்தையில் அமர்ந்திருந்தாலும் அக்கம் பக்கம் பராக்குப் பார்க்க விடாது, கவனம் சிதற இடங்கொடாது கற்பித்த அந்த ஆளுமையை என்னைப் போன்றோருக்கு ஆசிரியராகத் தந்தது சிறி வேலுப்பிள்ளை வித்தியாசாலை.
அந்த வகையில் ஶ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலையும் மறக்க இயலாத கடைசி வரை வரக்கூடிய ஒன்று.
90/91 களில் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வெளி விறாந்தையில் இயங்கிய வித்தியாசாலை இன்று வரை ஒண்டி இருக்க வேண்டிய நிலையில் உள்ளமை வருத்தமான விடயம்.
அதை மாற்றி அமைத்து சொந்த இடத்தில் நம் வித்தியாசாலையை இயங்க வைக்க உழைக்கும் அனைவருக்கும் பெரு நன்றி.