அடுப்புக்கரியும் சிக்னல் பற்பசையும்.

214

அடிப்பில் விறகும், அடுப்பு மேல் கறியும், அடுப்புக்கு முன் அம்மாவும் வெந்து கொண்டிருப்பதை கண்டிருக்கிறோம். ஆனாலும் அடுப்பின் மேல் வெந்து கொண்டிருப்பதில் மட்டும் கவனம் கொண்டிருந்திருப்போம் நம்மில் பலர்.

அன்றிப் புகை மூட்டத்தினுள் அமர்ந்திருந்த அம்மாத் தேவதைகளை கருத்தெடுத்திருக்க மாட்டோம்.

ஆனாலும், அணைந்த அடுப்பில் மிச்சமாக இருக்கும் கரிக்கட்டியை அதே அம்மா எடுத்து உடைத்து தூளாக்கி பல் தீட்டத் தந்தது நம்மில் பலருக்கு நினைவில் நிற்கும்.

காலையில் எழுந்து கரித்தூளை உள்ளங்கையில் எடுத்து, எச்சில் பிரட்டிய சுட்டு விரலில் தொட்டு எடுத்து, அழுத்தித் தேய்க்கும் போது தீட்டப்பட்டுப் பளபள எனவாகும் பற்கள்.

அவ்வியல் வெண்ணிறப் பற்களைப் பழுப்பென்றார்கள். கரித்துகளைப் பயன்படுத்துவோம் நாகரிகப் பிற்பட்டோர் என்றார்கள்.

இன்னொரு பக்கம் தொழில்நுட்பம் வெள்ளை அடித்த பற்களைக் காட்டி, நாகரிக முற்பட்டோர் என மாயம் செய்து, பற்பசைகளை அறிமுகஞ் செய்தனர்.

(ஆனாலும் கரியால் தீட்டிய பற்களை விட பற்பசை தீட்டிய வெள்ளையன் பல் பழுப்பு அதிகம். புலம் பெயர்ந்தவர்கள் இதை அவதானித்திருபொஅர்)

ஆம்..! பன்னாட்டுப் பொருளாதாரப் பேய்களின் கூக்குரல்கள் வேதமாக்கப்பட்டு இயற்கைக் கரி விரட்டி அடிக்கப்பட்டது.

பற்பல பற்பசைகளை நாமும் வழியின்றிப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் பயணப்பட்டு விட்டோம்.

இப்போ என்ன என்றால், எந்தக் கரியை பல்லுக்கு உகந்ததல்ல என்றார்களோ, எந்தக் கரியால் பல் பழுதாகிப் பாழாகிறது என்றார்களோ அந்தக் கரியைக் கொண்டு உருவான பற்பசையை பல்லுக்குறுதி என கூவி விற்கத் தொடங்கி விட்டனர்.

கரி திண்டு உருவான சந்தையின் புதுமுக வரவு கரி கொண்டு உருவான சிக்னல் பற்பசை..

இப்போ எனக்கெழுந்த சந்தேகம் என்னவெனில், பழங்கதைகளை எழுதி வைக்கும் பழக்கம் பன்னாட்டுப் பேய்களிடம் வழக்கொழிந்து விட்டனவா? இல்லை.. எங்களுக்கு உள்ள மறதி எனும் வியாதியை பன்னாட்டுப் பொருளாதாரப் பேய்களின் பிள்ளைகளும் அற்ந்து கொண்டு விட்டார்களா?

எது எப்படியோ … எங்கள் பழைய பழக்க வழங்கங்களை எங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம். இல்லை எனில் எங்கள் பிள்ளைகளும் எங்களைப் போலவே……..