நாளொரு குறள் – 18

176

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

சற்று வித்தியாசமான குறள்தான். மழை வேண்டித்தான் உலகில் மிக அதிகமாக பூசைகள் செய்யப்படுகின்றன. துன்பம் வரும்பொழுதுதான் கடவுளை நினைக்கிறான் மனிதன். அப்படி இருக்க வள்ளுவர் என்ன சொல்கிறார். வானம் வறக்குமானால், அதாவது வறண்டுவிடுமானால் தேவர்களுக்குரிய சிறப்பான பூசனைகளும் நடக்காது என்கிறார்.

அதை இப்படிப் பார்க்க வேண்டும். மற்ற எந்த வேண்டுதலுக்கெனப் பூசை செய்தாலும் கிடைக்காமல் போனால் பூசையின் வலிமை கூடிக் கொண்டே போகும். மழை வேண்டிப் பூசை செய்தலில் பலன் எட்டாக்கனியானால் பூசையே நின்று போகும். பூசனைக்கான வலிமையை மழையே தருகிறது என்பது இதன் பின்னுள்ள பொருள்.

மழை இல்லாதபோது எதை வேண்டியும் சிறப்பான பூசனைகள் நடக்காது. மழை வேண்டியே நடக்கும். . பூசைகளின் பலனாய் மழை பெய்ய வேண்டும். அப்பலன் இருப்பதாக இருந்தால் மட்டுமே பூசனைகள் நடக்கும். பூசனைகள் செய்தும், பல பூசனைகளுக்குப் பின்னும் மழை இல்லை என்றால் அவை சிறப்பிழந்து குறைந்து அழிந்துவிடும்.

அதனால் மழை வேண்டிச் செய்யும் பூசனை மற்றதில் இருந்து வேறுபட்டது. அது பலனலிக்கா விட்டால் எல்லாப் பூசனைகளும் அழிந்துவிடும்.