கருப்பை அதிர்வுகளை
அன்னை பிரதிபலிக்க
இருதயத்தில் பிரதிஎடுக்கும்
அன்பின் பிரதிநிதி.
இரைப்பை நிரப்பியபால்
ஓரவாயுடன் விரவும்போது
புசிக்காமலே பசியாறும்
பரமாத்மாவின் தூதுவன்.
மார்பில் நர்த்தனமிடும்
மிதிகளின் ஸ்பரிசத்தால்
மார்பகத்தில் மின்மினிகளை
மிதக்கவிடும் கவிஞன்.
பிஞ்சுகை விரல்களால்
சின்னவிரலை சிறைபிடித்து
தத்தி தத்தி நடக்கும்போது
சித்திரம்காணும் ஓவியன்.
ஏடுகளைப் புரட்டும்
விரல்கள் சொல்லுமவன்
மேனிவிட்ட நீரின் கனதி.
பட்டமே அதன் பெறுதி.
சோகங்களின் சினேகம்
அகற்றும் பகலவன்
அந்திமகாலம் வரை
களத்து மேட்டுகாரன்..
மோகன சாகரத்தால்
மோகமூட்டும் நிலவவன்
அறுவடை காலம்வரை
சோளக்காட்டு பொம்மை.
ஆதிமுதல் அந்தம்வரை
நிஜமாகவும் நிழலாகவும்
தோள்கொடுக்கும் தந்தை
நிகரில்லா உறவன்றோ.!