“ஆழ்கடலின்பேரலை”களும் எமைப் போலவே கரையோடு கதை பேச ஆசையுடன் அடிக்கடி வந்து போவதுண்டு.
இம்முறை(2004)அலைகள் கதை பேச வந்த போது கரையின் காதுச் செவிப்பறைகள் மட்டும் கிழியவில்லை.
எழில்கொஞ்சும் எங்களின் கரையோர முகம் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
மாங்கனித்தீவு” என மாற்றார் பொறாமை கொள்ளும் எங்கள் சொர்க்கம் (Paradise)
இயற்கையின் சீற்றத்தாலும் ஒரு முறை நரகமானது(Hell).அழிவுகளுக்களின் நடுவே வாழ்ந்து வந்த
ஈழத்தமிழினத்துக்கும் இப் பெருந்துயரம் ஆன்மாவைநடுங்க வைத்தது.
கடல்படு செல்வமெல்லாம் அள்ளி வந்து தந்த நம் உறவுகளின் வீடுகள் தரைமட்டத்தோடு உடைக்கப்பட்டிருந்தது.
சிலரின் வீடுகள் அத்திவாரத்துடன் பெயர்க்கப்பட்டிருந்தது.
கரையோரத்திலிருந்து ஐநூறு மீற்றர்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்களின் வளவுகளிலும் முழங்கால் வரைக்கும் கடல் நீர் வந்ததால் கிணறுகளில் ஓர் எண்ணைப்படலம் கலந்திருந்தது.
ஆதலினால் குடிநீரும் இல்லை, குளிநீரும் இல்லை என்ற நிலையே எங்கும் இருந்தது.
போத்தல்களில் வந்த தண்ணீர் யானைப் பசிக்கு சோழப்பொரிக் கதையாகவே இருந்தது.
சீற்றம் தாழாத கடலன்னை மீண்டும் மீண்டும் அந்த இராட்சத அலைகளை அனுப்பித் தாண்டவம் ஆடுவாள் என்ற அச்சமும் மேலோங்கி இருந்தது.
திருட்டு வேலைகளைச் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையினைத் தேடுபவர்களும் அவ்வாறான வதந்திகளைப் பரவவிட்டிருந்தனர்.
அம்பாறையின் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட மக்கள் பெரும்பாலும் திட்டியான சிறு கற்பாறைகள் கொண்ட உயர்ந்த இடங்களைத் தேர்வு செய்து தங்கினர்.
அத்தகைய இடங்களில் ஒன்றுதான் “காயத்திரிகிராமம்”.
இராணுவ நெருக்குவாரங்களினால் ஓடுபவர்கள் கூட கையில் அகப்பட்ட பொருட்களுடன் ஓடிவந்தோம் என்பார்கள்.
ஆனால்…
இவர்கள் தண்ணீரில் தத்தளித்த போது உடைந்த கட்டடங்களின் சிதறல்களும், வேரோடு பிடுங்கப்பட்ட மரக்கொப்புக்களுமே கைகளில் அகப்பட்டது.
அவர்களிடம் அணிந்திருந்த ஆடையைவிட வேறு ஆடைகள் அறவே இருக்கவில்லை.
சுருங்கச் சொன்னால் அங்கே “இல்லை” என்பதே அதிகமாக இருந்தது.
குளித்துவிட்டு உடுக்க உடையில்லையே என்ற கவலை இருக்கவில்லை. குடிநீர் என்பதே கேள்விக்குரியதாகும் போது அந்தக் கவலை எப்படி எட்டிப்பார்க்கும்.
சில நாட்களின் பின்னர் சிறுமழை பெய்த போதிலும் கருங்கல் பாறைகள் அதிகம் கொண்ட அந்த இடத்தில் வெப்பமும் சிறிது அதிகமாகவே இருந்தது.
பிளாஷ்ரிக் போத்தல்களில் குடிநீர் மட்டுப்படுத்தப்பட்ட கிடைத்தாலும் பகலில் ஒரு மிடறுக்கு மேல் நீர் குடிக்க பெண்கள் தயங்கினர். காரணம் சிறுநீர் கழிக்கக் கூட உரிய மறைப்புகள் இல்லாத நிலையே அந்த முகாமில் காணப்பட்டது.
விசேட அதிரடிப் படையினரும்(STF) மக்களுக்கு உதவிகள் செய்திருந்தாலும் அவர்களின் அளவுக்கு அதிகமான பிரசன்னமும் தேவையற்ற தலையீடுகளும் குறுக்கீடுகளும் அதிகம் இருந்தது.
சிறுநீர் கழிக்கும் இடங்களை (Urinals)
மருத்துவர் வளர்பிறை,மருத்துவர் அமுதன்,மருத்துவர் அருள்,மருத்துவர் வாமன், மருத்துவர் தூயவன்,மருத்துவர் ஜோன்சன், திரு.பாரதன்,மருத்துவர் அன்பழகன், மருத்துவர் சத்தியா,மருத்துவர் தமிழினியன்,மருத்துவர் தமிழ்நேசன் ஆகியோர் தமது கரங்களினாலேயே அமைத்துக் கொடுத்தனர்.
அந்தப் பெண்களில் குளிர் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சலுடன் காணப்பட்டவர்களுக்கு மலேரியா(Malaria) நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தோம்.
எனவே MP test🦠 (Malaria Parasitic Test) செய்ய முயன்று கொண்டிருந்த போது எமக்கு மூத்த வைத்தியர்களின் ஆலோசனை கிடைத்தது.
ஆம், எங்கள் மூத்த வைத்தியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என எல்லா முகாம்களையும் வைத்தியசாலைகளை பார்வையிட்டு ஒருங்கிணைப்பு பணிகளை செய்தவாறு பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஈற்றில் அம்பாறை மாவட்டத்திற்கும் தமிழீழ சுகாதார சேவையின் பணிப்பாளர் Dr.கா.சுஜந்தன் மற்றும் வைத்தியக்கலாநிதி விக்கிரமன் ஆகியோர் வந்திருந்தனர்.
குளிர் காய்ச்சலுடன் நடுங்கிக் கொண்டிருந்த பெண்களின் நிலையை அவதானித்த சில நிமிடங்களிலேயே சிறுநீர்த் தொற்று பெண்களில் அதிகம் காணப்படுவதை உறுதி செய்துவிட்டு கிளிநொச்சியிலிருந்து தாம் எடுத்து வந்த பக்ரிம் (Bactrim)போன்ற நோயுயிர்முறிகளையும் (Antibiotics) தந்துவிட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் அங்கு வந்த கனடிய இராணுவ மருத்துவர்களுடனும் ஒக்ஷ்பாம் (Oxfarm) தொண்டு நிறுவனத்துடன் பேசிய போது தலையாய தண்ணீர்த் தேவை தீர்க்கப்பட்டது.
பென்னம்பெரிய கறுப்புநிற பிளாஷ்ரிக் தொட்டிகளில் குடிநீரும் குளிநீரும் நிரப்பி அன்று அறம்காத்தனர்.
கனடிய இராணுவ மருத்துவர்களின் வருகைதனை ஓர் சாதாரணனாக இதன் பின்னால் உள்ள இராசதந்திர, புலனாய்வு, பூகோள நலன் குறித்து ஆய்வு செய்ய யான் இன்றும் விரும்பவில்லை.
காரணம்,
பேரலைகள் எம் கரைகளை எட்டும் வரை அனர்த்தமுகாமைத்துவம் (Disaster Management) தொடர்பாக கிஞ்சித்தும் சிந்தித்திராத இலங்கை போன்ற நாடுகளுக்கு அவர்களின் அத்தியவசிய தேவை அக்காலத்தில் அதிகம் அதிகம் தேவைப்பட்டது என்பதே நிஜம்!
எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் நலன் காப்புப் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர்
(Tamils Rehabilitation Organisation) ஆற்றிய பணிகளை இச் சிறுபதில் இணைக்க முடியாமல் இருப்பதால் பிறிதொரு பதிவில் உங்களுடன் இணைவேன்.
-வயவையூர் அறத்தலைவன்-