மன்னியுங்கள் மாவீரர்களே!

மன்னியுங்கள் மாவீரர்களே!
**************************

மன்னியுங்கள் மாவீரர்களே!
இந்த மண் எங்களுக்கானதில்லை
என்கின்ற ஒப்புதலை நாளை
வாக்குகளாக வழங்கப் போகிறோம்

இனவழிப்பின் மீதுள்ள
பெருங்கோபத்தில் கொஞ்சம்
இனியென்ன ஆகுமென்ற
விரக்தியில் கொஞ்சம்
இனிவரும் காலத்தின்
பயத்தினில் மிச்சம்
இலங்கையின் இறைமையை
ஏற்கிறோம் என்பதை-நாளை
வாக்குகளாக வழங்கப் போகிறோம்

எழுபது ஆண்டுகளாய்
தர இயலாத ஒன்றை-இனி
அவர் தருவார் என்றியம்பும்
எம்மவர் தலையில்
செல் கொட்டிச் சொன்னாலும்
திருந்தார் அவர் திருந்தார்
இன்னும் தெருவெல்லாம் ஓலம்
தீராத என் ஊரில்
எங்ஙனம் சென்று நான்
என் மனம் ஆற்றுவேன்
வீழ்ந்தவர் கனவினை
எங்கென்று மீட்டுவேன்

மன்னியுங்கள் மாவீரர்களே!
இந்த மண் எங்களுக்கானதில்லை
என்கின்ற ஒப்புதலை நாளை
வாக்குகளாக வழங்கப் போகிறோம்

நாளும் நரகம் தந்த வாழ்வை
நீவீர் எழுந்து நிமிர்ந்திடச் செய்தீர்
தீயில் எரித்து கொன்றவர் முன்னே
தீயாய் எரிந்து எழுகதிர் தந்தீர்
நமக்கென நாடு பிறக்க
நிலத்தினில் கல்லறை புகுந்தீர்
மன்னியுங்கள் மாவீரரே
உம் கனவெல்லாம் ஒதுக்கிவிட்டு
கையேந்தி வாழும் வாழ்வை
கையேற்கும் ஒப்புதலை நாளை
வாக்குகளாக வழங்கப் போகிறோம்

வாளேந்திய சிங்கம்
வாசலில் பறக்கிறது
வாழாத வாக்குறுதிகள்
காற்றில் பறக்கிறது
கனவொறுத்தி வைத்துவிட்டு
கைவீசி நடக்கிறோம்
ஒருமித்த நாட்டுக்குள்
எல்லோரும் ஒன்றாக
வாழ்ந்துவிட முடியும் என்றிருந்தால்
நீங்களும் எங்களோடே வாழ்ந்திருக்கலாம்

மன்னியுங்கள் மாவீரர்களே!
இந்த மண் எங்களுக்கானதில்லை
என்கின்ற ஒப்புதலை
நாளை வாக்குகளாக
வழங்கப் போகிறோம்.

க.குவேந்திரன்
15/11/2019