ஆன்மீகச் சொற்பொழிவாளர்களில் சில சொற்பொழிவாளர்கள் கடவுள் வாக்குகளை, நல்ல முன்னெதிர்வுகளை சொல்வதுண்டு. நகைச்சுவையான செய்திகளையும் சொல்வதுண்டு. அத்தகைய அரும்பெரும் சொற்பொழிவாளர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் முக்கியமானவர் ஆவார். அவருடைய சொற்பொழிவுகள் ஆன்மீகச் சொற்பொழிவுகளாக இருப்பினும் அதையும் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் அவரிடம் அதிகமாக இருந்தது. எமது ஊரின் தெற்கேயுள்ள அருள்மிகு ஞான வைரவர் கோவிலில் ஓர் (7ஆம் திருவிழா) திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்டார். நாங்கள் பேராவலுடன் எதிர்பார்த்தது போல அன்றும் நகைச்சுசை ததும்ப சொற்பொழிந்தார். எங்களை அரும்பெரும் கருத்துக்களாலும், நகைச்சுவையாலும் நிறைத்தார்.
நகைச்சுவை கலந்து ஊட்டப்பட்ட கருத்துக்களாதலால் ஆண்டுகள் பல வேகமாகக் கழிந்தாலும் நினைவுகள் சில சாகாவரம் பெற்று நிற்கின்றன. நினைவில் கொள்ளக்கூடிய விடையங்கள் பலவுண்டு.அவற்றுள் ஒன்று பின்வருமாறு இருந்தது. ”தான் வந்து போகும் கோவில்கள் ஊர்கள் செல்வத்தில்,புகழில் தழைத்தோங்கும்” என்றும் சொன்னார். சொல்லிச் சில வருடங்களிலேயே பெரும் இடப்பெயர்வு நடைபெற்று எங்கள் தொல்லூர் பொலிவிழந்தது.
முப்பெருந்தேவியரும் கைகோர்த்து நடந்த எம்மூரின் தெருக்களில் முட்பற்றைகள் முளைத்தது. அயலூர்களில் இடம்பெயர்ந்து அல்லலுறும் வேலைகளிலெல்லாம் ஒலிநாடாவில் ( மக்செல் கசற்றில்) பதிவு செய்யப்பட்ட கிருபானந்தவாரியரின் உரைகளை எந்தை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆம், ஊரின் வளர்ச்சிக்கு இடையறாது உழைத்த உத்தமர் உற்சாகமூட்டும் வாரியாரின் வரிகளைக் கேட்டுக் கேட்டு தன்னைத் தினம் தினம் புதுப்பித்துக் கொள்வார். இன்னொரு கோணத்தில் நோக்கினால்,என் சித்தப்பா, மாமாக்கள் அம்மா உட்பட எங்கள் ஊரின் மூத்தவர்கள் கிருபானந்த வாரியாரின் ‘அருள் வாக்கு பெய்த்து விட்டதோ!?’ என ஏங்குவார்கள். அழிவுகளை முன்னறிந்து அதையும் நகைச்சுவையாகவே ஆறுதல் தந்துவிட்டுச் சென்றுவிட்டாரென இளையவர்கள் நாங்கள் சொல்வோம். ஆக்கிரமிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் திருவூரின் இன்றைய வளர்ச்சிகளை பார்க்கும் போது #வாரியாரின் #திருவாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகள் உண்மையாகி வருவது உவகையளிக்கிறது. ஆம்,ஆன்றோர் வாக்குப் பொய்க்காது! - ஓம் சாந்தி சாந்தி சாந்தி-