மூச்சடக்கி முத்தெடுக்கும் எங்கள் நெய்தல் உறவுகளை இப்படம் என் நெஞ்சில் கொண்டு வருகின்றது.
பாரம்பரிய முறைப்படி பல காலம் “கடல்படுசெல்வம்” தேடிய எம்மவர் தம் வாழ்வியல் தமிழுக்கு தந்த சொல் ஒன்றின் வேரினைத் தேடும் கதை.
ஒரு ஆண்மகன் தனது உடலில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு முத்துச் சிப்பிகளை கடல்மடியில் பொறுக்கி எடுக்க மூச்சடக்கியபடி நீரில் குதித்து மூழ்குவார்.
இன்னொரு ஆண்மகன் அதே கயிற்றின் மறு அந்தத்தைப் பிடித்துக் கொண்டு கவனம் அனைத்தையும் கயிற்றில் குவித்தபடி நீருக்கு வெளியே மேலே இருப்பார்.
உயிரினைக் காக்கும் இந்தக் கயிற்றினை நெய்தல் மண்ணில் வாழ்ந்த எம்மவர்கள் “மண்டைக்கயிறு” என அழைப்பர்.
நீரில் மூச்சடக்கியபடி முத்தெடுக்கும் அந்த ஆண்மகன் கயிற்றை ஆட்டினால் அல்லது மூச்சடங்கி திக்குமுக்காடி கயிறு ஆடுப்பட்டால் கடற்பரப்பின் மேற்பரப்பில் உள்ள ஆண்மகன் கடலின் ஆழத்தில் உள்ளவரை வேகமாக மேலே தூக்குவார்.
பொதுவாக ஒரு ஆண்மகன் முத்துக்குளிக்கும் போது தனது உயிரை காக்கப் போகும் அந்தக் கயிற்றை அல்லது உயிரிழையை தனது மனைவியின் சகோதரனிடமே ஒப்படைப்பார்.
இந்தப் பொறுப்பான வேலையை அத்தான் எனும் உறவுக்கும் மேலாக அக்காவின் கணவர் எனும் அதியுன்னத அன்புக்காய் உறவுக்காய் கண்ணும் கருத்துமாக செய்வார் நீரின் மேலே உள்ள மச்சான்.
ஆதலால்தான் மனைவியின் தம்பி அல்லது அண்ணன் எனும் உறவு முறையால் உண்டான மச்சானை “மண்டைக்கயிறு” எனச் சொல்லும் வழக்கம் எம்மிடையே உருவானது.
மண்டைக்கயிறு எனும் இச் சொல்
கடலின் கரைகளையும் தாண்டி நாடெங்கிலும் இன்று வரையிலும் பாவனையில் உண்டு.
இந்தச் சொல்லின் பாவனை எம்மவர் வல்லமையையும் உறவு முறையின் இறுக்கத்தையும் இயம்புகின்றது.
இந்தச் சொல் தற்காலத்தில் சிறிது மருவி “மண்டாக்கயிறு”எனவும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது.
உயரமாகச் சென்று இமயவரம்பினில் மீன் கொடியேற்றி இசைபட வாழ்ந்த தமிழ் கீழ் நோக்கிச் சென்று கடலின் ஆழங்களையும் ஆண்ட கதையும் கொஞ்சம் சொல்கின்றது இந்த மண்டைக்கயிறு.
தொடரும்…!