தேவார, திருப்பதிகங்களை பன்னிரு திருமுறைகளாக வகுத்துள்ளார்கள். 11 ஆம் நூற்றாண்டில் திருநாரையூரில் வசித்த நம்பி ஆண்டார் நம்பி எனும் இறைத்தொண்டர் 11 திருமுறைகளைத் தொகுத்தருளினார்.
12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
இப்பன்னிரு திருமுறைகளும் பன்னீர் திரு முறையாக மனதை மணக்க வைக்கும் வல்லமை கொண்டவை. அவற்றை நாம் மதம் கடந்து பொருள் கொண்டால் நன்மை கிட்டும்.
பன்னிரு திருமுறைகளின் ஆசிரியர்கள் 27 பேர்..
முதல் மூன்று திருமுறைகளாக திருஞான சம்மந்தரின் தேவாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த மூன்று திருமுறைகளில் அப்பர் அருளியவை தொகுக்கப்பட்டுள்ளன. ஏழாம் திருமுறையாக சுந்தரர் அருளியவை தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டாம் திருமுறையாக மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவை போன்றன உள்ளன.
ஒன்பதாம் திருமுறையில், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் போன்ற அருளாளர்களுடைய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு உள்ளன.
பத்தாம் திருமுறையாக திருமூலரின் திருமந்திரம் இடம்பிடித்துள்ளது.
பதினோராம் திருமுறையாக திருவாலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியான்டார் நம்பிகள் போன்றோரின் பாடட்கள் உள்ளன.
பன்னீரண்டாம் திருமுறையாக சேக்கிழார் பெருமான் அருளியவையும் உள்ளன.
இனி.. தோடுடைய செவியன் விடையேறியில் துவங்கி தேவாரத்தில் தமிழ் பயணித்ததை அவ்வப்போது காண்போம்.