மகத்துவர் அருளுக்கு புகழ் வணக்கம்.

https://drive.google.com/file/d/10rp2cWmULAAoVjQ2-66hpX6hAB2i8M_u/view?usp=drivesdk

தமிழீழ மருத்துவர் குடும்பத்தின் செல்வ மகன் அருள்.
தமிழீழ மருத்துவக் கல்லூரியின் சொத்து எங்கள் அருள்!
மருத்துவ சேவைக்கு அவன் பேரருள்.
பல மருத்துவ ஆளணியை வளர்த்துருவாக்கியவன் எங்கள் அருள்.
நிர்வாகம் செய்வதில் ஆழுமை அருள்.
இலட்சிய வேட்கையில் தூண் அருள்.

அவன் இருக்கும் சூழல் கலகலக்கும்.
அவன் விரல்கள் கீபோட்டில் பாட்டிசைக்கும்.
அவனைச்சுற்றி ஒரு கூட்டமிருக்கும்.
அதிலும் எப்போதும் ஒரு ஏற்றமிருக்கும்.

வேடிக்கை அவனது பேச்சில் இருக்கும்.
கூடிக்குலாவுதல் அவன் இரசிப்பில் இருக்கும்.
புகைப்படக் கலையில் என்றும் ஆர்வமிருக்கும்.
இயற்கைப் பசுமையில் ஓர் வாஞ்சை இருக்கும்.

நண்பர்கள் சேர்ந்து பல வேடிக்கை செய்வோம்.
எங்களுக்குள்ளே பல சேட்டைகள் செய்வோம்.
சிலநேரம் கறாராய் மோதி இருப்போம்!
முட்டாள் தினத்தில் நீரில் மூழ்கியிருப்போம்.
விடிந்ததும் கூடி மகிழ்ந்து சிரிப்போம்.

வேலையென்று வரும்போது கவனமிருக்கும்.
வரும் தோழர்கள் வலிகளில் கருணையிருக்கும்.
நேரங்கள் தாண்டி உயிர் மீட்டல் நடக்கும்.
நீண்ட பணிகளில் உடல் தளர்ந்து கிடக்கும்.
ஓய்வு வேளையில் விளையாட்டில் ஓர் இன்பமிருக்கும்.
உனது கதைகள் எப்போதும் வெடித்துச் சிரிக்கும்.

வேட்டைக் கதைகள் என்றால் உன்னை கேட்கவேணும்!
நீ வேட்டையாடியதை அன்று உண்ண வேணும்!
சோகத்தை நெஞ்சிலே தேக்கவேணும்.
யாழ்வேள் தவறியதை சொல்லி நீ ஆறவேணும்.
என்னென்னவோ எல்லாம் சொல்லவேணும் ஆனால்
சொல்ல ஒரு காலம் திரும்பவேணும்.

அருளுக்கு அவன் வீடு அயல்வீடு ஆனால் எங்களுக்கோ அது தாய்வீடு.
எப்போதும் எங்களுக்கு வரவேற்பிருக்கும்.
போய்வர எப்போதும் விருப்பிருக்கும்!
அம்மாவின் மலர்ந்த முகம் அரவணைக்கும் அவன் அப்பாவின் அன்பிலே திடமிருக்கும்.

கைபிடித்தவளும் போராளி
அவள் கைப்பிடித்தவனும் போராளி.
புகழுடன் பிள்ளைகள் பெற்றெடுத்து
விவசாயத்தில்ப் பெரும் சாதனை படைத்து
வெற்றிகள் பலதும் சாதித்து நீ நேசித்த பச்சை மரம் நிழல் கொடுக்கும்.

பாதியில் தவிக்கவிட்டுப் போகிறாயடா
நெஞ்சமெல்லாம வலிக்க இன்று கூடினோமடா!
பிள்ளைச்செல்வம் உன்னை இழந்து தவிக்குமடா
உன் சகோதரம் வலியால் துடிக்குமடா!
உன்னைப் பெற்றெடுத்த தாய்தந்தை ஏங்குவாரடா
என்ன சொல்லி ஆற்ற என்று கூறுவாயடா!

மாவீரனே உன் வீரக் கதைகள் சொல்லவேண்டுமே
வரலாற்றை ஒரு நாள் வரையவேண்டுமே!
உள்ளவரை நிச்சயம் எழுதுவோமடா
உன் சந்ததி உன் கதை படிக்குமடா!

போய்வா எங்கள் அருளாளனே
விரைவில் அனைவரும் சந்திப்போம்!

  • மருத்துவர் வாமன் –