“தோழிமாரைத் தொலைத்த தேசத்தின் கண்ணீர்!”

“தோழிமாரைத் தொலைத்த தேசத்தின் கண்ணீர்!

எங்க போய் தேடுவனோ?

 

——————————
எருக்கம் பூ முளை கிள்ளி மூக்குத்தி வச்சவளே
அழகாக இருக்கானு அன்னைக்கு கேட்டவளே
அறியாத வயசில் நானும் என்னத்த சொல்லுவனோ
அழியாத அந்த ஓவியத்த எங்க போயி தேடுவனோ
அன்னைக்கு இத உனக்கு சொல்லத் தோணலையே
இன்னைக்கு எங்க போய் உன்னைய தேடுவனோ

மண்சோறு ஆக்கயில என் மடி சாஞ்சு நின்னவளே
புழுதி பூசி உடம்பெல்லாம் அழுக்காகி நிப்பவளே
கிழிசல் துணி போட்டாலும் கிளியோபட்ரா நீ தானே
அன்னைக்கு இத உனக்கு சொல்லத் தோணலையே
இன்னைக்கு எங்க போய் உன்னைய தேடுவனோ

நெருப்பெடுத்து விளையாடி கோழிக் கூடெரிச்சு
கொப்பரிட்ட அடிவாங்கி உன் தேகம் சிவத்த போதும்
செத்த கோழிக்காக தேம்பித் தேம்பி அழுதாயே
எங்க தேசம் எரியேக்க என்ன பாடு பட்டுரிப்ப
இன்னைக்கு எங்க போய் உன்னைய தேடுவனோ

பூவரசம் இலையில நாதஸ்வரம் இசைச்சோமே
புலுனிக் கூட்டம் போல ஒன்னாவே திரிஞ்சோமே
மேல் சட்ட போடாம பொழுதெல்லாம் அலைஞ்சோமே
மேல் நாட்டு நாகரிகம் அதுதான்னு அப்ப நமக்கு தெரியலையே பார்த்தியா
மேகம் கறுத்து மழை பெஞ்சாலே போதுமே
காகிதக் கப்பல்கள் வீட்டுக் கரைவந்து தட்டுமே
அத்தன நினைப்புகளும் வந்து வந்து தேடுதே
இன்னைக்கு எங்க போய் உன்னைய தேடுவனோ

கிட்டிப்புள்ளு அடிக்கையில நெத்திக்காயம் கொண்டவளே
காஞ்ச தடம் காணையில உன் நினைப்பு வந்து போகுதடி
கிளித்தட்டு மறிக்கேக்க அடி வாங்கி அழுதாயே
ஆறுதலா ஒரு வார்த்த நான் உனக்கு சொல்லலையே
அன்னைக்கு இருந்த வாழ்க்க இன்னைக்கு திரும்பாதா
இன்னைக்கு எங்க போய் உன்னைய தேடுவனோ

வேலியில ஓணான் பிடிச்சு வாயில புகையிலை அடைச்சி
அது சுத்திச் சுத்தி ஓடேக்க கை கொட்டிக் கொட்டிச் சிரிப்பாயே
கோடிக் காசிருந்தும் அந்த சந்தோசம் கிடைச்சிருமா
மாடியில குடியிருக்கும் மனுசருக்கு அது தெரிஞ்சிருமா

தும்பிக்கு நூல் கட்டி தம்பியோட சண்ட போட்டு
சில்வண்டு பாட்டுக் கேட்க தீப்பெட்டி தேடி
பக்கத்து வீட்டில கடன் வாங்கி பத்திரமா வச்சிருந்த நாலஞ்சு தீக்குச்சி கீழ கொட்டி அம்மாட்ட குட்டு வாங்கி
கொழுத்தும் வெயில் குளிச்சு
ஓடுகிற வாய்க்காலில எருமைகளா கிடந்தோமே
இன்னைக்கு ஏதிலியா கிடக்கேனே எங்க போய் உன்னைய தேடுவனோ

தென்னங் குரும்பையில தேர் செய்து ஓட்டினோமே
இப்ப தங்கத்தில தேர் இழுத்தும் சாமி உன்ன காணலையே
பாவாடை சட்டையில பவனி வரும் பேரழகே
உன்ன பார்த்த பொறாமையில நிலா தேய்ஞ்சு பிறையாச்சோ
சீரான வகுடெடுத்து சிரட்டை பொட்டு வச்சு
பள்ளிக்கு போகேக்க ஒன்னா கைகோர்த்து வந்தவளே
நீ வயசுக்கு வந்த பின்னாடி நாம பிரிஞ்ச சாபம் என்ன
சாம்பல் பூத்த நிலத்தில
இன்னைக்கு எங்க போய் உன்னை தேடுவனோ

ஊருக்க ஆமி வந்து இடம் பெயர்ந்து போகேக்க
கடைசியா கண்ட உன் முகம் கண்ணுக்கு முன்னால வந்து வந்து போகுதடி
காலில செருப்புமில்ல முகத்தில சிரிப்புமில்ல
உயிரை கையில பிடிச்சு ஊனமாய் ஊரே நடந்து போகேக்க
ஓடிவந்து ஒரு வார்த்தை நான் பேச முடியலையே

இந்தப் பாரே பாத்திருக்க இனமழிஞ்சு மீண்ட நிலம் இன்னும் அழுதாறி முடியலையே
கையில விலங்கு பூட்டி இராணுவ பஸ்சுக்குள்ள நீயிருந்த படத்த வச்சி
தெருவில கிடந்து கதறும் உன்ர அம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவனோ
கொலையுண்ட இனத்திற்கு துயருண்டு ஆயிரம்
என் போல் உன் போல் தொலைவுகள் ஆயிரம்
அழுதாறி முடியாத அன்னை நிலத்துக்கு
எப்படி ஆறுதல் சொல்லுவனோ
இன்னைக்கு எங்க போய் உன்னை தேடுவனோ

-க.குவேந்திரன்-