கல்வி

537

இறைவன் மனிதர்களை சிந்திக்கும் அறிவுடன் படைத்தார். அத்துடன் கல்வி என்னும் அறிவைக் கொடுத்து உயத்தினார். ஒரு மனிதன் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் கல்வியும் முக்கியம். எதனாலும், எவராலும், எக்காலத்திலும், எப்போதும் அழிக்க முடியாதது கல்வி. ஆம்.. ஒருவர் கற்ற கல்வி என்றுமே அழிவில்லாது.

அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தும் போது கூட குருவை கடவுளுக்கு முன் வைத்தனர் நம் முன்னோர். தாய், தந்தை உயிர் தந்த தெய்வங்கள் என்றால் குரு அறிவைப் போதித்த தெய்வம்.

ஒரு கல் எப்படி சிற்பியின் திறனால் கையெடுத்துக் கும்பிடுகிற சிலையாக மாறி தெய்வமாக மாறுகிறதோ அதேபோல்தான் ஒரு பிள்ளை தாய், தந்தை வளர்ப்பில் இருந்து அடுத்த கடடமாக ஆசிரியர்களால் பலவாறு பயிற்றுவிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்படுகின்றனர்.

ஆதி காலம் தொட்டு கல்வியின் அவசியம் தேவை குறித்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டில் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அழியும். எதிரிகளால் அழிக்கக் கூடியதாய் இருக்கும். ஆனால் கல்வியை அழிக்க முடியாது.

முந்தைய காலங்களில் ஆசிரியர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக, மிக்க மதிப்புடனும் நடத்தப்பட்ட்னர். அறிவைப் பெற்று விஞ்ஞானத்தில் மிக
வேகமாக முன்னேறி பல விடயங்களை அறிந்த பின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையில் சிறு இடைவெளி இருக்கலாம். ஆனாலும் மிக மரியாதையுடன்தான் இன்றும் நடத்தப்படுகின்றனர்.

எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், பணக்காரனாலும், வீரனானாலும் தன் குருவைக் கண்டால் மிக மரியாதையுடனும், பணிவுடனும் நடக்கின்றனர்.

ஆசிரியராக பிறப்பது தெய்வம் தந்த சிறந்த படைப்பு. பிறருக்கு அறிவை ஊட்டுவது சிறந்த கொடை.

ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும் கல்வி மிக அவசியம். வறுமை, ஏழ்மை எந்த நிலை ஏற்பட்டாலும் கல்வி முக்கியம்.

பொருளாதார முன்னேற்றம் இறக்கம் வரும் போகும் கல்வி வாழ்நாள் முழுக்க வரும். கற்றோர் எங்கு சென்றாலும் மதிப்பு ,சிறப்புதான். ஒரு மனிதன் ஊனம் உற்றவராக இருக்கலாம் ஆனால் கல்வி முக்கியம். அதனால்தான் படிக்கவில்லை என்றால்
கண்ணிருந்தும் குருடர்கள் எனச் சொன்னார்கள்.

படிக்காமல் மேதையானோர் இருக்கலாம் அவர்கள் அனுபவ படிப்பு கொண்டோர். அப்படிப்படடோர் விதிவிலக்கானவர்கள்.

கற்றது கையளவு கல்லாது உலகளவு எனும் பணிவுடன் மேலும் அறிவினை வளர்ப்போம். கல்வியை தெய்வமாய் மதிப்போம்

அன்புடன்
வ.பொ.சு —வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்