தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாக தன்மை

100

கீழ் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டது போல் தமிழர் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சேவைகள் வீழ்ச்சி அடைந்து செல்கிறது.

2015 இல் இருந்து கர்ப்பகால இறப்பு வீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இருப்பதுடன் இன்றுவரை ஒரு மகப்பேற்று நிபுணர் நியமிக்கப்படாததுடன் அம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவிக்கப்படும் அபாயத்தில் தாய்மார் இருக்கிறார்கள்.

கடந்த வருடம் மன்னாரில் அம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர் பகுதி வைத்தியசாலைகள் ஆளணி மற்றும் வசதிகள் பற்றாகுறையுடன் வைத்தியசாலைகள் தரம் உயர்த்தப்படாமலும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படாமையினால் நிதி பற்றாக்குறையுடன் குறைந்தளவு சேவைகளை வழங்குகின்றன.

இதே நேரம் முஸ்லீம் அரசியல்வாதிகளின் முயற்சியால் சிறிய வைத்தியசாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விசேட வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்டு மேம்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலைக்கு காரணம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகத தன்மையா ? அல்லது உரிமைகளை பெற்று தருகிறோம் என்ற பல்லவியை பாடிக் கொண்டு மக்களின் நிலை மற்றும் அபிவிருத்தியில் அக்கறையற்ற தன்மையா ?

இந்த இழிநிலைக்கு பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி தமிழரின் மாற்றுக் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளும் பொறுப்பு கூறவேண்டும். ஏனென்றால் சரியான எதிர்க்கட்சிகள் இருந்தால் இந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றக் கட்சிகளை சரியான பாதையில் இட்டு சென்று இருக்கலாம்.

இன்றுவரை அவர்கள் செய்தது எல்லாம் சமஸ்டி தீர்வில் குறை கண்டு பிடித்தது தான். அண்மையில் யாரோ ஒரு மருத்துவருக்காக சுகாதார சேவையில் அதிகாரப் பகிர்வை பற்றி பேசிய தமிழரசுக் கட்சினருக்கு தமிழர் பகுதி வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் தெரியவில்லையா ?

சுகாதாரம் மட்டுமன்றி கல்வி, பொருளாதாரம் குடித்தொகை உட்பட அனைத்திலும் புலிகளின் காலத்தில் இருந்ததை விட தரம் தாழ்ந்து போய் உள்ளது. சாதாரண தர பரீட்சையில் தகுதி பெறுபவர்கள் தமிழர் பகுதிகள் அடிமட்டத்தில் உள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் தமிழர்களின் மாவட்டங்கள் உள்ளன. தமிழரின் குடித்தொகை அருகி வருவதுடன் ஏனைய இனத்தோர் தமிழ் பகுதிகளில் குடியேறி வருகிறார்கள். இதற்க்கெல்லாம் யார் பொறுப்பு ?

வவுணதீவு கொலைகளை அடுத்து கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையான தமிழர் தமிழ் அரசியல்வாதிகள் தாம் உள்ளே இருந்த போது எவருமே திரும்பி பார்க்கவில்லை என்றும் தமக்கு விடுதலை கிடைக்கும் நிலை ஏற்பட்டவுடன் அதற்கு உரிமை கோர மட்டும் முன்வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
12.05.2019