சேர்மனி அரசு பிரான்சு தேசத்தில் தான் கைப்பற்றிய கிராமங்களில் பிரெஞ்சு மொழிக்குப் பதிலாக சேர்மன் மொழியில் கற்பிக்க ஆணையிட்டது.
இதனால் பிரெஞ்சு மக்கள் வேதனை அடைந்தனர். ஒரு முறை பிரெஞ்சு பள்ளியை பார்வையிட அரசி வந்தார். அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவியின் திறமையைக் கண்டு மகிழ்ந்தார்.
பெண்ணே உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள் என்றார். அரசியாரே நிச்சயம் தருவீர்களா? என்றாள் சிறுமி.
அரசி நிச்சயம் தருகிறேன் என்றார். உடனே மாணவி எங்கள் பள்ளியில் எங்களுடைய தாய் மொழி பிரெஞ்சில் கல்வி கற்க ஏற்பாடு செய்யுங்கள் என்றாள்.
இந்த கோரிக்கையைக் கேட்டதும் ஜேர்மன் அரசி அதிர்ச்சி அடைந்தார். அரசி அமைதியாக இருப்பதைக் கண்ட அந்த மாணவி அரசியாரே ஏன் பேச்சற்று இருக்கின்றீர்கள்? என் வேண்டுகோளை நிறைவேற்ற இயலாதா? என்று கேட்டாள்.
அரசி வகுப்புமுழுவதும் கண்ணை சுழலவிட்டு, பின்னர் அந்த மாணவியிடம் நீ என்ன பைத்தியமா? தின் பண்டங்கள், நவநாகரிக ஆடைகள், படிப்புக்குத் தேவையான உபகரணங்கள் கேட்காமல் இப்படிக் கேட்கிறாய் என்றார்.
அடிமைப்பட்ட உடலோ ஆத்மாவோ எந்தப் பொருளாலும் பெருமையடையாது என்றாள் சிறுமி. இதைக்கேட்ட அரசி மகளே நீ தேசத்தில் பற்றுடைய பெண். பெரிய பரிசைப் பெற விரும்புகிறாய். நான் ஏமாற்றம் அளிக்கமாட்டேன். இனிமேல் பிரெஞ்சு மொழியில் பயிற்றுவிக்க ஆணையிடுகிறேன் என்றாள்.