அநாதையாய் நமது முகம்..

உலகமொரு கண்ணாடி என்று நினைத்துக்கொண்டு அதில் எங்கள் முகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

நாம் தேடும் நம் முகம் தவிர எல்லா முகங்களும் அதில் தெரிகிறது.

நம்முகத்திற்கும் அம்முகங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மனதைக் குடைய, இது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாய் ஒதுக்கித் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

ச்சீ.. இந்த உலகம் மோசம் என்று அலுத்துக்கொள்கின்றர்கள் சிலர்..

இந்த உலகில் இத்தனை முகங்களா என்று மேலும் மேலும் ஆச்சரியத்தோடு தேடுகின்றனர் இன்னும் சிலர்..

தேடி அலுத்தவரும் தேடலில் தொலைந்தவரும் என்றோ ஒரு நாள் தாம் தேடிய அந்த முகத்தைக் கான்கின்றார்கள்..

அம்முகத்தில் தேடல் இல்லை..என்ன செய்கிறாய் என்று கேட்கின்றார்கள்.. என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என்கிறது அந்த முகம்..

தேடுகிறாயா? இங்கே உட்கார்ந்து கொண்டு தேடுகிறாயா? என்ன சொல்கிறாய்? என்கிறார்கள்..

என்னை என்னுள் தேடுவதுக்கு உட்கார்ந்துதானே தேட வேண்டும் என்கிறது அந்த முகம்…

ஆம்… நாம் எல்லாரும் மற்றவர்களில் நம்மைக் காண முயல்கின்றோம். ஆனால் அவர்களோ தினத்திற்கு ஒரு விதமாய் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்..

நாமும் அவர்களைப் போல் மாறிக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் மற்றவர்களில் நம்மைத் தேடி மற்றவர்களியே பார்த்துக்குண்டிருப்பதால் நம் மாற்றம் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை..

இதை அறியாமல் மற்றவர்களைப் போல் நாமும் மாறி விடுவோம் என முடிவெடுத்து உலகோடு கலந்து விடுகின்றோம்.

முகங்கள் அடையாளமிழந்து போக முகமூடிகள் சிதறிக்கிடக்கின்றன..

போகிற போக்கில் கண்ணுக்குச் சிக்கிய ஏதோவொரு முகமூடியை மாட்டிக் கொண்டு உலகம் பார்க்கக் கிளம்பி விடுகின்றோம்..

நமது முகம் அநாதையாய்…