மழை நடனம்

466

வேலைப்பளு மிகுந்த காலை நேரம் 08:30.

எண்பது வயதான ஒரு முதியவர் அவர் கட்டை விரலில் போடப்பட்டிருந்த தையலைப் பிரிப்பதற்காக வந்திருந்தார். ஒன்பது மணிக்கு ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவசரப்பட்டார்.

வேறு மருத்துவர் கவனிக்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால், அவரை ஒரு இருக்கையில் அமரச்செய்தேன். அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எனக்கும் அப்போதைக்கு வேறு நோயாளிகள் இல்லாததால், அவரை கவனிப்பது என முடிவு செய்தேன். அவரது காயத்தை ஆராய்ந்ததில் அது நன்கு குணமடைந்தது தெரிய வந்தது. ஆகவே தாதியை அழைத்து அவரது தையலைப் பிரிக்கவும், காயத்திற்கு மருந்து போடவும் கூறினேன்.

அவரது காயத்தை ஆராயும் போது, “வேறு மருத்துவரிடம் செல்ல அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி இருக்கிறீர்களா என்ன..? இவ்வளவு அவசரத்தில் இருக்கிறீர்களே?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் மறுதலித்து ஒரு மருத்துவமனைக்கு அவரது மனைவியுடன் காலை உணவருந்த செல்ல வேண்டியிருப்பதாக கூறினார்.

அவரது மனைவியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவரது மனைவி அங்கு சில காலமாக தங்கியிருப்பதாகவும் ஒரு வகை (Alzheimer’s disease) வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவர் தாமதமாக போனால் அவரது மனைவி விசனப்படுவார்களா என வினவினேன்.

அதற்கு அவர் தான் யாரென்றே அவரது மனைவியால் கண்டு கொள்ள முடியாதென்றும், கடந்த ஐந்து வருட காலமாக அப்படித்தான் இருப்பதாகவும் கூறினார்.

ஆச்சரியத்தில் “நீங்கள் யாரென்றே உங்கள் மனைவிக்குத் தெரியாது. இருந்தாலும் தினம் காலை அவரைக் காண செல்கிறீர்களா..!?” எனக் கேட்டேன்.

எனது கையை மெல்லத்தட்டிய படியே “அவளுக்கு என்னைத் தெரியாது. ஆனால் இன்னும் எனக்கு அவளை யாரென்று தெரியுமே!” என்று கூறியபடியே புன்னகைத்தார்.

அவர் கிளம்பும் போது “இப்படியான ஒரு அன்புதான் எனக்கும் கிடைக்க வேண்டும்” என்று எண்ணியபடியே திரண்டு வந்த கண்ணீரை அடக்கிகொண்டேன்.

உண்மையான அன்பு என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான். இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோ மாற்றி அடைவதோ அல்ல… என்பதும் புரிந்தது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாம் மிகச்சிறந்தவற்றை அடைந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் தங்களுக்கு கிடைப்பவற்றை மிகச்சிறந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்!

புயலை எதிர்கொள்வது என்பதில் மட்டுமில்லை… மெல்லிய மழைச்சாரலில் நடனமாடுவதையும் சேர்த்துதான் இந்த உலக வாழ்க்கை!