நாளொரு குறள் – 71

நாள் : 71
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :10

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அறத்தை சொல்லி, இல்வாழ்க்கையின் சிறப்பு, வாழ்க்கத்துணை மற்றும் மக்கட்பேற்றைப் பற்றிச் சொல்லிய வள்ளுவர், இல்லற வாழ்வின் பண்பைப் பற்றிய பாடத்தை முதலில் ஆரம்பிக்கிறார்.

பண்பின்றி அறம் செய்ய இயலாதல்லவா?

அன்பின் பண்பினைச் சொல்கிறார் வள்ளுவர்.

அன்பினைக் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா?

கண்டிப்பாக இயலாது என்கிறார் வள்ளுவர்.

அன்பு ஒருவரிடத்தில் இருக்குமாயின் அது வெளிப்பட்டேத் தீரும். அதை எதைக் கொண்டும் அடக்கி வைக்க இயலாது.

அடக்கப்பட்ட அன்பு எப்படி வெளிப்படும்?

கண்ணீராக வெளிப்படும் என்கிறார் வள்ளுவர்.

அடக்கப்படும் உணர்வுகள் வெளிப்பட எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் உண்மை அன்பு மாத்திரம் கண்ணீராகவே வெளிப்படும்.

கோபம், அடிதடி இன்னபிற ஆர்பாட்டங்கள் அன்பின் வெளிப்பாடு எனச் சிலர் சொல்லுவார்கள். அது அகங்காரத்தின் வெளிப்பாடாகும். அன்பு என்பது ஓருயிரை மற்றும் சார்ந்ததல்ல.

அன்பை எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. அன்பு கொண்டவர்களின் கண்ணில் துளிர்க்கும் நீரே அந்த அன்பை உரக்கச் சொல்லும் என்கிறார் வள்ளுவர். தன் பிள்ளையைக் கிள்ளியது என்பதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளையை அடித்துத் துவைப்பது எப்பொழுதும் அன்பில் சேராது. பிள்ளைக்கு வலிக்குமே என துடிப்பதே அன்பு என வள்ளுவர் சொல்கிறார்.

இரு துளிச் சொட்டுகள்
கண்ணில் எட்டிப் பார்க்கின்றன
உன் இருப்பு
உணரப்படும் பொழுதெல்லாம்