வாசிப்பு – ஒரு அனுபவக் குரல்

480

போர் மேகம் சூழ்ந்த காலத்தில் வெற்றிச் செய்தி படிக்கத்தான் வாசிகசாலைக்குப் போகத் தொடங்கினேன்.  ஆனால் போகப் போக உலகச் செய்திகளும் கவனம் ஈர்க்கக் தொடங்கின. குறிப்பாக 90 களில் சவுதியையும் குவைத்தையும் மையப்படுத்தி அமெரிக்க மேற்கொண்ட அரசியல் யுத்த நகர்வுகள் அன்றைய நாளிதழ்களில் முதல்பக்கத்தில் இடம்பிடித்ததோடு மட்டும் நின்றுவிடாது, என் மனதிலும் இடம் பிடித்தன. 

அணிசேர் நாடுகள், அணிசேரா நாடுகள், நேசநாடுகள் போன்ற சொற்கள் என்னுடன் சொந்தம் கொண்டாடத் தொடங்கி எந்த நாடு எந்த அணியில் எனத் தேடத் தொடங்கினேன். ஒவ்வொரு நாட்டினதும் பலம் பலவீனங்களை ஆயத் தொடங்கினேன். அன்றுதான் தொடங்கியது ஒன்றின் பல் பக்கங்களை புரட்டும் பழக்கம். இது வாசிப்பு எனக்குத் தந்த முதல் பரிசு.

அடுத்த கட்டமாக நட்பு வட்டம் மாற்றம் காண சித்திரக் கதைப்பக்கம் மனசு பாய்ந்தது. வகுப்பில் இருந்த முப்பது பேரும் சித்திரக் கதைப் புத்தகம் வாங்கி ஆளுக்காள் கைமாற்றி ஓய்வு நேரங்களை எல்லாம் சித்திரக் கதைகள் நிரப்பிக் கொள்ள, குறுகிய காலத்தில் போரிட்டு அம்புலிமாமாவும் ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். இந்த காலத்தில் நீதியை நோக்கி என் கால்களை நகர்த்தும் உத்தி எனக்குள் புகுந்து கொண்டது எனலாம்.

காலம் கடந்து போக, குமுதம் ஆனந்த விகடன் போன்ற சனரஞ்சகச் சஞ்சிகைகள் கைகளில் தவழ்ந்தன. அவ்வப்போது நாவல் பழங்கள் சிலவும். தனியன், குடும்பம், சமூகம், கிரைம், அரசியல், நகைச்சுவை என பலந்தளங்களை இக்கால வாசிப்பு அடையாளம் காட்டியது.

கால ஓட்டத்தில் மிதந்து கொழும்பை அடைந்த பொழுதில், நாளிதழ்களுக்குள் வாசிப்பு வட்டம் சுருங்கினாலும் மின்னூடகங்கள் அறிமுகமாகின. அம்மின்னூடகத்தில் நீந்தி இந்தியாவின் நாளிதழ்கள், சஞ்சிகைகள் என்னை வந்தடைந்தாலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் எனக்குத் தரவில்லை எனலாம்- நாளிதழ் இல்லாமல் காலை கடந்ததில்லை என்ற ஒன்றைத் தவிர..

மீண்டும் காலத்தின் பாய்ச்சலில் மூழ்கி பிரான்சில் கரையேறிய போது முதலில் கிடைத்தது தனிமை மட்டுமே.. தனிமை என்கதைக் காட்டிலும் ஏகாந்தமே பொருத்தமானது. ஏகாந்தத்தில் உள்ள காந்தம் என்னை தள்ளிச் சென்று சேர்த்த இடம் தமிழ் மன்றம்..

இன்றுநான் ஏதோ ஓரளவுக்கு எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தமிழ்மன்றமே.. என்னைப் பொறுத்த மட்டில் மன்றம் பற்றிச் சொல்லாமம் என்னைப் பற்றியும் சொல்ல முடியாது.. வாசிப்பின் முக்கியத்துவம் பதிவும் நிறைவடையாது.

அடுத்த பதிவில் நிறைவடையும்..