நாளொரு குறள் – 21

405

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 1

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு

துணிவு என்பது என்ன என்பதை அறியாவிட்டால் இந்தக் குறளின் பொருள் புரிவது போல் இருந்தாலும் குழப்பும்.

துணிவு என்பது முடிவு செய்து கூறுவது. துணிவு என்பது ஆராய்ந்து தெளிவுடன் உறுதியுடன் முடிவாகச் சொல்வதாகும்.

பனுவல் என்றால் பலரால் செய்யப்படும் நூல்கள்.

விழுப்பத்து வேண்டும், அதாவது சிறப்பான புகழீட்ட வேண்டும் என விரும்பும் அனைத்து நூல்களுமே எதை ஆராய்ந்து, தெளிவுடன் உறுதியாகச் சொல்கின்றன தெரியுமா?

ஒழுக்கமாக வாழும் பற்றற்ற சான்றோர்களின் பெருமையையே அவை சொல்கின்றன.

நிலைத்த புகழை ஒரு நூல் பெற வேண்டுமானால் அது ஒழுக்கத்தின் வழி ஒழுகும் சான்றோரின் பெருமையைச் முடிவாகச் சொல்வதாக இருக்க வேண்டும் என பின்னிருந்தும் பொருள் எடுக்கலாம். அது எழுத்தாளனுக்கு நல்ல வழிகாட்டியாகி விடுகிறது.