நாளொரு குறள் 46

445

நாள் : 46
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :6

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

இல்லறம் என்பது எதற்காக? அதை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என எளிமையாக ஐந்து செய்யுள்களில் சொல்லிவிட்டு, இனி சொல்லப்போவது அதன் பெருமையையும் புகழையும் பற்றி.

அறத்தின் வழியே இல்வாழ்வுதான். அப்படியிருக்க இல்வாழ்வை அதற்குரிய அறத்துடன் வாழ்பவனை விட, மற்ற வழிகளாகிய பிரம்மச்சரியம், சன்னியாசம், வனப்பிரஸ்தம் போன்ற வழிகளில் வாழ்பவர்கள் பெரிதாக ஒன்றும் பெற்றுவிடப் போவதில்லை.

இப்பொழுது இங்கே ஒரு சின்ன குழப்பம் வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் நீங்கள் கவனமாய் திருக்குறள் படிக்கவில்லை என்று பொருள்.

நீத்தார் பெருமையில் அனைத்து இன்பங்களையும் துறந்த துறவிகளைப் பற்றிச் சொன்னாரே அதுவும் இப்படித்தானா? துறவியாய் வாழ்வதால் ஒன்றும் பெற முடியாதா? அதில் அப்படி ஒரு தனித்துவமும் இல்லையா?

இந்தக் கேள்வி மனதில் எழுப்பிக் கொண்டு இந்தச் செய்யுளை ஆராய வேண்டும்.

ஆசைப்படாமலிருக்க ஆசைப்பட்டானாம் புத்தன்.

துறவு என்பதே அனைத்தையும் துறத்தல். அப்படி இருக்க அதில் பெறுவதைப் பற்றி நாம் யோசிக்க என்ன இருக்கிறது?

சரி பிரம்மச்சரியம்?

பிரம்மச்சரியம் என்பது அறிவுத் தேடல். கற்றுக் கொள்வதே குறிக்கோளாய் அலைதலாகும். பிரம்மச்சரியம் என்பது உறவு கொள்ளாமை என பாலுறவைச் சேர்த்த வக்கிரம் என்று வந்தது என தெரியவில்லை. பிரம்மம் என்பது உலகில் உள்ள அனைத்தையும் குறிக்கும். அதை கற்றல் மட்டுமே நோக்கம். அறிவும் தெளிவும் பெறுதலே அதன் நோக்கம்.

இல்வாழ்க்கை வாழ்வோனின் அறம் அவனுக்கு அறிவையுன் தெளிவையும் எளிமையாகக் கொடுத்து விடுகிறது. பிரம்மச்சாரி ஆச்சார்யனை தேடி அலைந்து கற்கிறான். இல்வாழ்வோனுக்கு கல்வி அவனைத் தேடி வருகிறது.

வனப்பிரஸ்தம் கொண்டோர் அமைதி தேடுகிறார்கள். அது அறவாழ்வு வாழ்வோனுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது.

அதனால் இல்வாழ்க்கை வாழ்பவன் மற்ற இயல்பு வாழ்க்கை வாழ்பவருக்கு துணையாக இருப்பது மட்டுமல்ல. அவர்கள் பெறும் அத்தனை பலன்களையும் பெற்றுவிடுகிறான். ஆக கொடுப்பதால் அவன் கெட்டுப்போவதில்லை!!!