அறப்போர் வீரர் அரியநாயகம் சந்திரநேரு

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்கும் …” என்ற இன உணர்வுள்ள வரிகள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழீழ அரசின் கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரான புதுவை இரத்தினதுரை அவர்களின் அந்த வரிகளை கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் மாமனிதருமான அரியநாயகம்சந்திரநேரு அவர்கள் பாடலை இடைமறிக்கிறார்.

“இல்ல தம்பி பொத்துவில் வரைக்கும் அல்ல, உகந்தையில் ஒரு முருகன் ஆலயம் ஒன்று உள்ளது.

உவந்தையும் தமிழீழ எல்லைக்குட்பட்டதுதான்.

பாழடைந்து கிடக்கும் அந்த முருகன் கோவிலை நான் சாவதற்கு முன்னால் புனரமைக்க வேண்டும்.

அங்கு இருக்கும் தமிழின் அடையாளத்தை எம் மக்களுக்கும், சர்வதேசத்துக்கும், சிங்கள ஏகாதிபத்தியத்துக்கும் புரிய வைக்க வேண்டும் என்று ஆவேசப்படுகிறார்.

இதைக் கேட்ட போராளி மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

உகந்தை என்ற இடம் கிட்டத்தட்ட தென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் என்ற கிராமத்தை தாண்டி செல்லும் போது, சின்ன உல்லை, பெரிய உல்லை, பானமை கடந்த பின்னர் உள்ள காட்டுப் பிரதேசத்தையும் தாண்டிய பின்னர் அமைந்துள்ள
தமிழர்தம் தொல்லூர் ஆகும்.

 

அந்த அழகிய தொல்லூர்களை சிங்கள பூமியாக தம் கைகளுக்குள் வைத்திருந்தது அதிகார வர்க்கம்.

அஃதே,

மேற்கு பக்கமாக தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, அழிக்கம்பை ஆகிய தொல்லூர்களுக்கும் பல சிறப்புக்கள் உண்டெனவே உண்டு.

உகந்தை முருகன் ஆலயத்தை எம் மூத்த தமிழ் அரசனான இராவணன் கட்டி வணங்கியதாக ஐதீக நாவல்கள் குறிப்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அந்த முருகன் ஆலயம் எம் தமிழீழ வரைபடத்தில் குறிக்கப்படாது போனாலும், ஆண்ட பரம்பரையான தமிழனின் பிரதேசங்களை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் உண்மை வரலாறுகளை திரிவுபடுத்தி அதை சிங்களவர்களின் பூர்வீகமாக பதிவு செய்ததை சுட்டி காட்டினார்.

உண்மையில் ” சந்திரநேரு ” என்ற தனிமனித சரித்திரம் அவரில் இருந்து ஆரம்பமானதல்ல.

அவரது தந்தையான அரியநாயகம்
“அறப்போர் வீரர் அரியநாயகம்” எனப் போற்றப்படுபவர்.

அரியநாயகம் அவர்களின் சாத்வீக போராட்ட முறைமைகளில் இருந்தே மக்கள் பணியில் முன் நகர்ந்திருந்தார் சந்திரநேரு.

இதற்கு உதாரணமாக அங்கே அழிக்கம்பை என்ற இடத்தில் வாழ்ந்து வந்த நாடோடிகள் இனத்தை சார்ந்தவர்களையும் அதை தாண்டி பறங்கிய இனத்தை சார்ந்த மக்களையும் சிங்களமயமாக்கலுக்கு அடி பணியாது தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களாக உருவாகுவதிலும், அவர்கள் மீதான சிங்கள அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதிலும் அண்ணல் அரியநாயகம் அவர்களின் பங்கு முக்கியமானது.

எமது அழிக்கம்பை மக்களுக்கான
பாடசாலை ஒன்றை நிறுவி அவர்களை வளப்படுத்தியது மட்டுமல்லாது. அவர்களை தாய்த்தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களாக உருவாக்கியிருந்தார்.

அந்த நன்றியுடமையினை அரியநாயகத்தின் புதல்வனான சந்திரநேரு மீதும் அம்மக்கள் காட்ட தவறியதில்லை.

ஒரு காலகட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் போராளிகள் தங்கி இருப்பதாக சிங்கள இனவெறி படையும் இனவெறியர்களும் இனப்படுகொலை ஒன்றை செய்ததாகவும், அதில் பல பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என கொல்லப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டதாகவும் சொன்னார்.

மாமனிதர் சந்திரநேரு அவர்கள் போராளி மருத்துவர்களுக்கு அதன் நினைவாக அவரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை காட்டி விழி கலங்குகிறார்.

உண்மையில் சந்திரநேரு என்ற ஒரு மனிதனை சாகடிப்பதற்கு இலங்கை இராணுவ புலனாய்வு அமைப்பு தன் ஆளுகைக்கு கீழ் இருந்த கைக் கூலிகளின் துரோகிகளுக்கு கட்டளையிட்ட போது, அவர் இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் தமது நடவடிக்கைகளுக்கு பல தடைகள் வரும் என்பதை முன்னுணர்ந்து இருந்தார்கள்.

மும் மொழியாற்றல் கொண்ட சந்திரநேரு தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற எந்த மொழியில் என்றாலும் பிரச்சனைகளைக் கையாள்வதில் வல்லமை பொருந்தி இருந்தார்.

அம்பாறை மாவட்டத்தின் மனிதநேயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த அவர் தமிழ் பிரதேசங்கள் மட்டுமன்றி அம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பறங்கிய இனமக்களுடன் சரி நாடோடியின மக்களுடன் சரி முஸ்லீம் அப்பாவிச் சிங்கள மக்களுடன் சரி நெருங்கி இருந்தார் அவர்களின் பிரச்சனைகளை தன் பிரச்சனையாக கையாண்டார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கு மருத்துவ மனிதநேயப் பணிக்காக சென்ற போராளிகளை இனபாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான மனிதநேயப் பணிகளை செய்யுமாறு வேண்டி இருந்த அவர் போராளிமருத்துவர்களுக்கு சிங்கள இராணுவ புலனாய்வாளர்களாலும் விசேட அதிரடிப்படையாலும் உருவான பல நூறு தடைகளை அகற்றிய தடையகற்றியாக இருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

உண்மையில் சிங்கள புலனாய்வுப் பிரிவுக்கு மாமனிதர் சந்திரநேருவும் அப்போதைய மட்டு அம்மாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர்
லெப்.கேணல் கௌசல்யனும் பெரும் தடைகளாக இருந்ததை மறுக்க முடியாது அதனாலே அவரின் வாகனம் என்று தெரிந்தும், தனது காவல்துறை உறுப்பினர்கள் அந்த வாகனத்தில் பாதுகாப்பு பணிக்காக பயணிக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த வாகனத்தை இடைமறித்து அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

துரோகக் கும்பலும் கட்டளையை நிறைவேற்றியது. படுகாயமடைந்த சந்திரநேரு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட லெப் கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் 3 பேருடன் சிங்கள காவல்துறை பாதுகாப்பு அதிகாரியும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மனிதநேயப் பணிகளில் இன மத பேதங்கள் இன்றி செயற்பட்ட அன்புக்குரிய சந்திரநேரு அவர்கள்.

மருத்துவ வசதிகள் அற்றிருந்த அம்பாறை மாவட்டத்தில் திலீபன் நடமாடும் மருத்துவமனைகளை நிறுவவேண்டும் என்ற வேண்டுகோளை நிலைநிறுத்தி, தமிழீழ மருத்துவத்துறையிடம் இருந்து அம்பாறையில் தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை நிர்மானிக்கவும் காரணமாக இருந்தவரை, என பல நூறு வரலாற்று நிகழ்வுக்கு சொந்தமானவரை மனிதமற்ற கொன்று போட்டது.

அம்பாறை மக்களுக்கு பேரிழப்பான மாமனிதர் சந்திரநேரு அவர்களின் சாவு அம்பாறையில் பணிகளில் இருந்த பலநூறு போராளிகளையும் பாதித்தது என்பதில் ஐயம் இல்லை.

ஆழிப்பேரலைக்கு அடுத்து வந்த இரண்டு மாதங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழிகளில் உதவிய பெரும் மனிதனையும் இழந்து தவிக்கிறது அம்பாறையும் தமிழினமும்.

நன்றி

இ.இ.கவிமகன்