சோக வரலாற்றை எழுதிய வெற்றி

544

இலங்கைக்குச் சுதந்திரம் வழங்க முதலே இலங்கையை ஆளும் உரிமையை இலங்கையருக்கு வழங்கினாலும் ஆட்சிக் கடிவாளம் ஆங்கிலேயர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டது 1931 இல் உருவாக்கப்பட்ட டொனமூர் யாப்பு.

இதுவரைக்கும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று ஆங்கிலேயனை எதிர்த்து அரசியல் செய்து அதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்ற இலங்கை அரசியல்வாதிகள், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் கடிவாளமும் தம்மிடமே இருக்க வேண்டும் என்ற புள்ளியில் நின்று எதிர்ப்பு ஆரசியல் செய்தனர். இதனூடு மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்தனர்.

இந்த அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆங்கிலேய சோல்பரி யாப்புருவாக்கத்தில் ஈடுபட்ட சம காலத்தில் இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை எந்தப் பாதையில் நகர்த்தலாம் எனத் தேடினர். ஆங்கிலேய எதிர்ப்பு அரசியல் வலுவிழந்தாலும் முற்றாக அழியாத நிலையில், அவ்வெதிர்ப்பு அரசியலைக் கைவிட முடியாத சூழ்நிலையிலும், வலுவான இன்னொரு அரசியல் மையத்தை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இலங்கை அரசியல்வாதிகள் இருந்தனர்.

இதன் வெளிப்பாடாக, 1944 இல் அன்றைய நிதிமந்திரியும் இலங்கையின் நிரந்தரத் தந்திரியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா புதிய அரசியல் மையத்தை உருவாக்கினார். இலங்கையின் அரசகரும மொழியாக இருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு சிங்களத்திற்கு ஆட்சிமொழி அந்தஸ்த்தை வழங்கப் பாராளுமன்றத்தில் பிரேரித்தார். அதற்கான காலக்கெடுவையும் விதித்தார்.

இலங்கையை விட்டு ஆங்கிலேயர் முற்றாக வெளியேறும் காலம் கனிந்து விட்டதையும், அதன் பின்னரான அரசியல் களச்சூடு மக்கள் மனதை வெல்வதில் தங்கி இருக்குமெனவும் கணித்து, தன் அரசியல் எதிர்காலத்துக்காக ஜேஆர் கொண்டு வந்த இப்பிரேரணை விவதங்களின் பின் சிங்களமும் தமிழும் அரச கரும மொழியாக இருக்க வேண்டுமென மாற்றம் பெற்று நிறைவேற்றப்பட்டது.

என்றாலும் சோல்பரி யாப்பு, சுதந்திரம் போன்ற களேபரங்களுக்குள் இலங்கை அரசியல் பயணப்பட்ட காரணத்தால் ஆட்சிமொழி விவகாரம் உறங்கு நிலை அடைந்தது. 1948 இல் சுதந்திர இலங்கை பிறந்தாலும் ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருந்தது. சுதந்திரக் சுவிங்கத்தின் சுவை குறைந்தது. இலங்கை அரசியல்வாதிகளிடம் அதிகாரப் போட்டி சூடு பிடித்தது.

1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசில் மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தனது சிங்கள மகாசபா மாதம்பையில் நடத்திய வருடாந்த கூட்டத்தில் ‘சிங்களம் மட்டும்’ தான் இலங்கையின் அரசகரும மொழியாக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். இத்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கும்படி கேட்டு நெருக்கடி கொடுத்தார்

ஆனால் ஐ.தே.க ஏற்க மறுத்த நிலையில் பண்டாரநாயக்கா இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தனது மந்திரி பதவியை ஜூலை 1951இல் இராஜினாமா செய்தார். ஐதேக வை விட்டு விலகிய பண்டாரநாயக்கா சிங்கள மகாசபாவைக் கலைத்து விட்டு 1951 செப்டெம்பரில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாபித்துக் கொண்டார். ஐதேக வில் குவிந்திருந்த அரசியல் அதிகாரம் இரண்டு பட்டது.

தொடர்ந்து ஐ.தே.க. அரசாங்கம் அரச கருமமொழி மாற்றம் பெறுவது குறித்த அக்கறையின்றி இருப்பதாகவும் கால வரையறை ஒன்றை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றஞ் சாட்டினார். சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் இரு ஆயுதங்களாகக் கொண்டு இலங்கையில் அரசியல் அதிகாரத் தைப் பெற்றுக்கொள்ளலாம் என கண்ட பண்டாரநாயக்கா அவற்றை வெகு திறமையாகவே கையாள முற்பட்டார்.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்பதனூடாக ஆங்கில அறிவற்றதால் அரசாங்க உத்தியோகத்தை தமிழனிடம் இழந்த சிங்களக் கல்விச்சமூகத்தின் ஆதரவு பண்டார நாயக்காவுக்குக் கிடைத்தது. தனிச்சிங்களம் என்றவுடன் சிங்களப் பழைமைவாதிகள் உயர் சமூக அந்தஸ்த்தையும் தமக்குரிய அங்கீகாரத்தையும் அடையலாம் என்ற நோக்கில் ஒன்றிணைந்தனர். கண்டிச் சிங்களம் –  தாழ்ந்த சிங்களம் என்ற இரட்டை முனைகள் வளைந்து இணைந்து பண்டார நாயக்காவுக்கு அரசியல் காப்பரணாக 1952 இல் பெரு வெற்றி பெற்றுப் பிரதமரானார் பண்டாரநாயக்கா.

பண்டாரநாயக்கவின் முதல் நடவடிக்கையாக தனிச்சிங்களச் சட்டமூலம் 1952 ஜூன் 5 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஜூன் 14 இல் நிறைவேற்றப்பட்டது.

பண்டாரநாயக்காவின் இவ்வெற்றியே இலங்கை அரசியல் அதிகார மையம்மாக சிங்களத்தையும் பௌத்தத்தையும் ஆக்கியது. பண்டார நாயக்காவின் இந்த வெற்றியே என்றும் இலங்கைத் தீவின் அமைதி எதிர்ப்பு சக்தியாக இருக்கும்.

ஒரு இனத்தின் உள்ளக அதிகாரப் போட்டியில் இன்னொரு இனம் அழிக்கப்படும் சோக வரலாற்றை எழுதியதும் பண்டாரநாயக்காவின் இந்த வெற்றியே..

ஆம்.. சிங்களவரின் அதிகாரப் போட்டியில்  அகப்பட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பேரவலச் சோக இனமாக தமிழினம் உள்ளது….?