பட்டறிவாலும் பகுத்தறிவாலும் புடம்போடப்பட்டவர்கள் எம் மக்கள்!

பட்டறிவாலும் பகுத்தறிவாலும் புடம்போடப்பட்டவர்கள் எம் மக்கள்!
*********** *********** **********

ஆறாம் அறிவினையும் பெற்றுக் கொண்ட மானுடர்கள் ஓரிடத்திலிருந்து தமைச் சூழவுள்ள இடங்களை அவதானிக்க உயரமான காவல் கோபுரங்களை(Observation Point) அமைப்பார்கள்.

மரங்களில் வாழும் எம் முந்தையராகிய குரங்கு போன்ற மிருகங்களைத் தவிர தரையில் வாழும் மிருகங்கள் தூரத்தே வரும் ஆபத்துக்களை கண்புலன்களால்
கண்டுணர முடியாதவை ஆகும்.

நான்கு கால்கள் கொண்ட அந்த நண்பர்கள் எங்களைப் போல காவல் கோபுரம் அமைக்க முடியாதவர்கள் என்பதால் அது சாத்தியப்பாடு அற்றவை ஆகும்.

ஆனால் உயரமான ஒட்டகச்சிவிங்கிக்கு இந்தக் காவல் கோபுரம் சம்பந்தமான கவலை கிடையவே கிடையாது.

மிக நீண்ட கழுத்தும் கூர்மையான பார்வைத் திறனும் கொண்ட உயரமான இம்மிருகம் தனைச் சூழும் ஆபத்துக்கள் தூர வரும் போதே அவதானித்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிடும்.

குறிப்பாக கொடிய சிங்கம்(Lion), ஹைனா (Hyena) போன்ற விலங்குகளுக்கு இரையாகாமல் தப்பிச் செல்லும் இரகசியம் அதன் நீண்ட கழுத்துத்தான்.

“எங்கள் மக்களின் பட்டறிவுக்கும் ஒட்டகத்திற்கும் என்ன சம்பந்தம்?” என நீங்கள் கேட்பது புரிகின்றது.

ஆம், போர் நடைபெற்ற காலகட்டத்தில் அதிக வினைத்திறன் மிக்க தொலைத்தொடர்பு சாதனங்களுடன் எங்கள் மண்ணில் சேவையில் ஈடுபட்டிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எல்லாருமே ஒரு வகையில் மக்கள் மத்தியில் இந்த ஒட்டகத்தினை போலவே செயற்பட்டார்கள்.

அவர்கள் தங்ககம் அமைத்திருந்த அல்லது சேவையில் ஈடுபட்டிருக்கும் பிரதேசத்தில் இராணுவ தாக்குதல்
நடைபெற இருப்பதை முக்காலத்தையும் உணர்ந்த முனிவர்கள் போல் முன்னறிந்து அங்கிருந்து இரவோடு இரவாக மெல்ல நகர்ந்துவிடுவார்கள்.

இங்கே ஒளிப்படத்தில் கழுத்தில் காயமடைந்திருக்கும் ஒட்டகம் போல சில சர்வதேச தொண்டுப் பணியாளர்கள் காயமடைந்த ஒரு சில சம்பங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால் அவர்கள் எல்லோருமே சர்வதேச தொண்டு நிறுவனத்தில் பணி செய்த நம்ம உள்ளூர் பணியாளர்களே!

“புத்திக்காரன் வித்தை நாலு நாளைக்கு” என்பதை போல இரவோடு இரவாக இடம் மாறும் இந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உத்தியை அல்லது வித்தையை பின்னாளில் எங்கள் மக்களும் கற்றுக்கொண்டனர்

சர்வதேச தொண்டு பணியாளர்கள் இரகசியமாக அகன்று சென்ற இடங்களில் தமக்கான பாதுகாப்பினை தாமே தேடிக் கொண்டனர்!