வயவனாக நிமிர்வு கொள்ள நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்வோம்

417

வயவையூரின் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ கௌமுதி நூல் இவ்வாண்டு தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. 1918 ஆம் ஆண்டு வெளியான இந்நூலின் நூற்றாண்டு விழாவை வயவர்கள் அனைவரும் அணியாகி ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ வேண்டும்.

பல நூல்களை உசாத்துணையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நூல், இன்று பல நூல்களின் உருவாக்கத்திற்கு உசாத்துணை நூலாக உள்ளமை இந்நூலையும் இந்நூலின் நூற்றாண்டு விழாவையும் வயவர்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை எமக்குணர்த்தும்.

இந்நூல் உருவான காலத்தில் உடனிருந்த வயவர்கள் இந்நூலுக்கும் இந்நூலாசிரியரான ஆசுகவிக்கும் உரிய மதிப்பை அளித்திருப்பார்கள். ஆனால் எமது மண்ணின் வரலாற்றை பல்லாயிரம் நூற்றாண்டுகள் கூறப்போகின்ற இந்நூலுக்கும் இந்நூலாசிரியரான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளைக்கும் நாம் எவ்வாறு மதிப்பளிக்கப் போகின்றோம். அதற்கான கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக இந்நூலின் நூற்றாண்டு எமக்கு வாய்த்திருக்கிறது. அதை நாங்கள் நழுவ விடலாகாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இராது.

வரலாற்று ஆய்வாளர்களாலும், வரலாற்று நூலாசிரியர்களாலும், வரலாற்று ஆர்வலர்களாலும் யாழ்ப்பாண வரலாற்று நூலாகக் கொண்டாடப்படுகின்ற, நூற்றாண்டைக் கடந்த அரும்பெரும் பெறுமதி மிக்க நூலாகத் துலங்குகின்ற இந்நூல் எமதூரின் பெருமிதமாகும். இப்பெருமிதத்தை எமதூரின் எதிர்காலச் சிற்பிகளுக்கு வழங்க இந்நூற்றாண்டு விழா எமக்குதவும். இதனை நாம் தவற விட எந்தவொரு வயவனுக்கும் விருப்பம் இராது.

பயிர் மட்டுமல்ல அறிவும் விளை மண் எமதூர் என்பதை காலங்காலமாக  உலகத்தாருக்கு அடையாளப்படுத்தி நிற்கும் இந்நூலையும் இந்நூலின் நூற்றாண்டையும் கொண்டாடுவதன் மூலம் எம் மண் வாசனையை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்த வேண்டிய எமது பொறுப்பும் இந்நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் மூலம் நிறைவேறும். எம் பொறுப்பை நாம் நிறைவேற்ற ஒவ்வொரு வயவனுக்கும் நெஞ்சு துடிக்கும்.

தொழில்நுட்ப முன்னேற்றம் அற்ற காலத்தில், டச்சுமொழியிலும் போத்துக்கேய மொழியிலும் எழுதப்பட்ட நூல்களை அம்மொழி அறிந்தவர்களைக் கொண்டு உள்வாங்கி, உள்வாங்கியவற்றை அறிவாய்ந்து, அறிவாய்ந்த பன் நூற்றாண்டுக் கால வரலாறை சுவைபடத் தொகுத்து வழங்குவது மாபெரும் தவத்துக்கு ஒப்பானது. அத்தவத்தின் பயனை அடைந்தவர்கள் நாங்கள்.. அப்பயனுக்குக் கைமாறு செய்ய வயவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்றைப் பதிவு செய்தல் சாதாரணமான செயல்ல. எவ்வித பிழையும் திரித்தலுமின்றிப் பதிவு செய்ய வேண்டும். கவனப்பிசகினால் பிழையான/திரித்த வரலாற்றைப் பதிவு செய்தால் தூற்றலுக்கும் பழிக்கும் ஆளாக வேண்டும். அவற்றை எல்லாம் வென்று உண்மையான வரலாற்றைப் பதிவு செய்த எம்மூர் கல்லடியானை நாம் கொண்டாட வேண்டும். அவர் நூற்ற நூலின் நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும்.

இதை எங்கே… எப்போ செய்ய வேண்டும் என்பதை வயவர்கள் அனைவரும் கலந்து கதைக்க வேண்டும். அதற்காக முகநூல்க் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/groups/2351679938400137/.

உலகெங்கும் வாழும் வயவர்களும் வயவையூர் அமைப்புகளும் இக்குழுமத்தில் இணைந்து இந்நூற்றாண்டு விழாவை முன்னெடுக்க பணிவன்புடன் வேண்டுகிறது வயவன் இணையம்.