நேரம் தவறாமல் உணவு உண்டவர்கள் இன்று உணவு உண்ணவே நேரமில்லை என்ற நிலையில் உள்ளோம். மூன்று வேளையும் விதம் விதமாக உண்டவர்கள் இன்று ஒரு வேளை உணவைக் கூட ஒழுங்காக உண்ண இயலா நிலையில் உள்ளோம். அக்கறை இல்லா உணவுப் பழக்கங்களை விருப்பமின்றி வழக்கமாக்கிக் கொண்டோம். யாராவது உணவில் அக்கறை காட்டினால், வெளிநாட்டில் இப்படியும் ஒரு ஆளா என்று விசித்திரமாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு மெனு தர்மப்படி நாங்கள் உண்ண வேண்டும்.
அதென்ன மெனு தர்மம்? எப்ப, அவ்வளவு, என்ன உண்ண வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு எங்கள் உணவு முறை அமைத்துக் கொள்ளலே மெனு தர்மம்.
பொதுவாக உணவுக்கட்டுப்பாட்டு வல்லுனர்கள் எமது உண்ணல் முறையை பின்வரும் படம் மூலம் விளக்குவார்கள்.
இதையே எங்கள் முன்னோர் “காலையில் பேரரசன் போலவும், மதியம் செல்வந்தன் போலவும். இரவு ஏழையைப் போலவும்” உண்ணல் வேண்டும் என்றார்கள். இங்கே குறிப்பிடப்படுவது உணவின் அளவு என்று நாங்கள் தவறாக விளங்கிக் கொள்கின்றோம். உண்மையில் இங்கே குறிப்பிடப்படுவது சத்தின் அடிப்படையிலேயே. அதை ஒட்டியே இந்த மெனுதர்மமும் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லிம் காலத்தில் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து, ஆயத்தமாகி 7, 7 அரைக்கெல்லாம் காலை உணவு எடுத்து விடுவோம். எட்டு மணிக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் மட்டுமல்ல காலை உணவை எட்டு மணிக்கு முன் உண்ண வேண்டும் என்பதனாலும் தான்.
பள்ளிப் பருவத்தினர்தான் இப்படி என்றால், தோட்டத்துக்குப் போவோரும் இதையே பின்பற்றினர். அதிகாலை எழுந்த உடன், தேனீரோ பாலோ அருந்தி விட்டு தொட்டத்துக்குச் சென்று விடுவார்கள். எட்டு மணியளவில் சிறியதொரு இடைவேளை எடுத்து பழஞ்சோற்றுக் கஞ்சி குடிப்பார்கள். இந்த முறையையே காலை நேர உணவு முறையாக மெனுதர்மம் சொல்லும்.
தானியங்கள் (செரியல்) அல்லது முட்டையுடன் பாண், பால், பழரசம் என்று சகல ஊட்டமும் நிறைந்த பேரரச உணவை உண்ண வேண்டும். தானியங்களில் தாவரப் புரதமும், நார்ப்பொருட்களும், மாப்பொருளும் நிறைவாக உண்டு. பாலில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும், விட்டமிம் டீ உம் அதிகம் உண்டு. பழரசத்தில் ஏனைய விட்டமின்கள் உண்டு. இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். காலையில் பழம் சாப்பிடக் கூடாதா என்று. பழத்தைக் காட்டிலும் பழ இரசத்தில் ஊட்டமும் அதிகம், கலோரியும் அதிகம் என்பதேலேயே பழ ரசம் காலையில் பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து ஊட்டமும் கலோரியும் அதுகம் நிறைந்த உணவை உண்ண வேண்டும் என்பதே மெனுதர்மம். அதிக அளவிலான உணவை உட்கொள்ளல் என்பதல்ல.
மதிய வேளை உணவை 12 இலிருந்து ஒன்றுக்குள் முடிக்க வேண்டும். இதன் போது அதிக மரக்கறிகளையும், 150 கிராம் அளவிலான மாமிசத்தையும், பழம் ஒன்றையும், சீஸ், யோக்கட் போன்ற பாற்பொருள் ஒன்றையும் முதன்மையாக உட்கொள்ள வேண்டும். மாச்சத்து நிறைந்த அரிசி, உருக்கிழங்கு போன்ற மரக்கறிகளை அளவுக்கேற்ப உட்கொள்ளலாம். இவ்வளவானது எங்கள் வேலையைப் பொறுத்து நாங்களே கணித்துக் கொள்ளலாம். எங்கள் வேலையில் உடல் உழைப்பு அதிகம் இருந்தால் 200 கிராம் வரையிலும், மூளையின் உழைப்பு அதிகம் எனில் 100 கிராம் அளவிலும் எடுக்கும் அதே வேளை தொப்பை குறைக்க வேண்டும் எனில் முற்று முழுதாகத் தவிர்த்து விடலாம்.
மாலை 4 மணியளவில் சிற்றுண்டி உண்ண வேண்டும். எங்கள் உடல்வாகைப் பொறுத்தும் உடல் எடையைப் பொறுத்தும் சிற்றுண்டி வகை மாறுபடலாம். ஆனால் அனைவருக்குமான அளவு ஒன்றுதான். 100 கிராம் அளவிலான சிற்றுண்டி. தேனீர்.. யோக்கட்.. பழம்.. என்ற வாறு அரைவயிறை நிரப்ப வேண்டும்.
இரவு நேரத்தில் லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அதிகளவிலான மாப்பொருள் நிறைந்த தானியங்களையும் மிதமான அளவில் மரக்கறியும் கொடுக்க வேண்டும். அதிகளவு மாப்பொருள் உண்ணுவதால் இரவில் பசி எடுப்பது தவிர்க்கப்பட்டு காலை வரை கலையாமல் உறங்க முடியும். இவ்வாறு காலை வரை கலையாது உறங்குவது பழக்கத்தில் வந்தவுடன் மாப்பொருள், மாமிசம், மரக்கறி, பாற்பொருள், பழம் எல்லாவற்றையும் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். நாங்கள் உறங்கும் போது உள்ளக அவயங்கள் ஓய்வு எடுக்க லேசான இரவு உணவு அவசியம்.
4 மணி நேரத்துக்கு ஒரு தடவை மெனுதர்மப்படி வயிற்றை நிரப்பி, மனசு நிறைந்த மகிழ்வோடு ஆரோக்கியமாக வாழ்வோம்.