ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டல் (spelling) தொல்லை, தமிழில் சந்தித் தொல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பது போல் எழுதுவது இல்லை; ஒலிப்பது ஒரு முறையாகவும், எழுதுவது ஒரு முறையாகவும் உள்ளது. தமிழில் சொற்களுக்கு இடையே சில மெய்யெழுத்துகளைச் சேர்த்துச் சேர்த்து எழுதுதல் வேண்டும்; மெய்யெழுத்தை எங்கே
சேர்ப்பது, எங்கே சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை –இது பலரது இடர்ப்பாடு.
ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் முறையால் வரும் ஐயங்களையும், இடர்ப்பாடுகளையும் எளிதில் போக்கிக்கொள்ள அகராதிகள் பேருதவி புரிகின்றன. தமிழில் எந்த அகராதி கொண்டும் சந்தி பற்றிய ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழி இல்லை. பல்லாண்டுகள் ஆழ்ந்து தமிழ் கற்றுப் பின்னர் தொன்னூல் விளக்கம் என்னும் விரிவான தமிழ் இலக்கண நூலை எழுதிய ஐரோப்பியத் தமிழறிஞரான வீரமாமுனிவர் என்னும் ரெவெரண்ட் பெஸ்கி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: —— he can neither understand them himself, nor will he ever be able to find them in any lexicon. ——Still I shall here copiously give many rules, which I have learnt by long experience
and accurate study. — Rev. Beschi, A Grammar of the Common Dialect of the Tamil Language, p.14.
தமிழில் சந்தி இருப்பதற்குக் காரணம், பழங்காலத்தில் பார்த்துக் கற்ற கல்வி குறைவு; கேட்டுக் கற்ற கல்வியே மிகுதி. பார்த்துக் கற்கும் கல்வி மிகுந்துள்ள இக்காலத்தில், சந்தி ஒலிகள் வேண்டாதவையாக உள்ளன. இருப்பினும் பார்க்கும் கண்களுக்கு, சொற்கள் தனித்தனியே தோன்றுமே தவிர, கேட்கும் செவிக்குத் தனித்தனியே ஒலிப்பதில்லை. ‘செவி’ ‘செல்வம்’ எனும் இரண்டு சொற்களைத் தனித்தனியே எழுதிப் பார்க்க இயலும்; ஆனால் ஒலிக்கும்போது “செவிச் செல்வம்” என்று சேர்த்து ஒலிக்காமலிருக்க இயலாது. அது போன்றே “சொல்லி கொடுத்தான்” எனும் இரு சொற்களையும் ஒலிக்கும்போது “சொல்லிக் கொடுத்தான்” என்று இடையில் “க்” சேர்த்தே ஒலிக்க வேண்டும். இத்தகைய மாறுதல்களையே சந்தி இலக்கணம் கூறும். ஆங்கிலத்திலும் சந்தி உண்டு. கீழ்க்கண்ட சொற்களை நோக்குக:
in + proper = improper
in + mature = immature
in + rational = irrational
in + logical = illogical
ஆங்கிலத்தில் in- என்னும் எதிர்மறை முன்னொட்டு (negative prefix) அடுத்து வரும் சொற்களின் முதலெழுத்துக்களுக்கேற்ப im-, ir-, il- என மாறுவது சந்தி மாற்றமேயாகும்.
பழந்தமிழில் “கட்டீமை விளைவிக்குமெனவுணர்ந்தானென்றம்பி” என்று எழுத வேண்டியதை, இக்காலத்தில் “கள் தீமை விளைவிக்கும் என உணர்ந்தான் என் தம்பி” என்று பிரித்து எழுதுவது தவறாகாது. ஆனால் எனக்குத் தெரியும் என்பதை எனக்கு தெரியும் எனவும், ஆளப் படும் என்பதை ஆள படும் எனவும் எழுதுவது தவறே. எனவே இன்றியமையாத இடங்களில் சந்தியைப் பயன் படுத்துவது தவிர்க்க இயலாததாகிறது.
அதனைப் பற்றி இக்கட்டுரையில் அறிய முயல்வோம். அதற்கு முன்பு, பள்ளியில் கற்ற தமிழ் இலக்கணங்கள் சிலவற்றை நினைவில் கொள்வோம்.