மொழிப் பயிற்சி – 25:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

416
மொழிப் பயிற்சி – 25:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

கவிக்கோ.ஞானச்செல்வன்

இரவு மணி எட்டு:-
தன் பேச்சைத் தொடங்கிய பேச்சாளர் “இந்த இனிய மாலை நேரத்தில்” என்று தொடங்கினார்.
உடனே, இல்லை மாலை நேரம் போய்விட்டது. இப்போது இரவாயிற்று என மாற்றினார்.
உண்மையில் பத்துமணி வரை மாலை என்பதுதான் தமிழர் வகுத்துள்ள கணக்கு.
– காலை (மணி 6 – 10)
– நண்பகல் (10 – 2)
– எற்பாடு (2 – 6)
– மாலை (6 – 10)
– யாமம் (10 – 2)
– வைகறை (2 – 6)
என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.

(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்), இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓராண்டின் ஆறு பருவங்கள். (கார் – மழை, கூதிர் – குளிர்)

“சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வுத் தீர்வைகளும்” எனும் தலைப்பில் ஒரு நூல் நமது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டு வந்திருந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு நம்மைத் திகைக்க வைத்தது. நீளமாக இருப்பதால் அன்று. ஆய்வு தீர்வை எனும் சொல் கண்டு மலைத்தோம்.

ஆயத் தீர்வை நாம் அறிந்ததுண்டு. இஃது என்ன ஆய்வுத் தீர்வை? ஆய்வுத் தீர்வுகள் எனும் சொல்லைத் தீர்வைகள் (நிலவரி) ஆக்கியமை எத்துணை பெரிய தவறு!

நூல்கள் பதிப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொது நூலகத்துறை இயக்குநரை —பொதுநலத்துறை இயக்குநர் என்று ஒரு நாளிதழ் அச்சிட்டிருந்தது. சில எழுத்துகள் மாறி அச்சுப் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய பொருள் வேறுபாடு?
நூலகத்துறையை நலத்துறையாக ஆக்கிவிட்டதே!
ஆங்கிலப் பத்திரிகைகளில் இப்படி வந்திருந்தால் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதி கிழி, கிழி என்று கிழித்திருக்கமாட்டார்களா?

பத்து ஆண்டுகள் முன் ஒரு வார ஏட்டில் ஒரு கவிதை படித்தேன்.
அதில் “அக்கினிப் பிரவேசம் அயோத்தியில் நடந்தது” என்று ஒரு வரி. இராமன் இராவணனைக் கொன்ற பின், சீதையை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பும் முன்பு, சீதை அப்பழுக்கற்றவள் எனக் காட்டத் தீக்குளிக்கச் சொன்னான். அந்த அக்கினிப் பிரவேசம் இலங்கையில் நடைபெற்றது. இவரோ அயோத்தியில் என்று எழுதியுள்ளார். அரைகுறையாய் அறிந்த செய்தி கொண்டு மோனை அழகுக்காக இப்படி எழுதினாரோ!

தஞ்சை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில், “பஸ் நின்ற பின் இரங்கவும்” என்று எழுதியிருக்கிறார்கள். “ஐயோ இந்த ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்தோமே” என்று தன்னிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.

இதுமட்டுமன்று; “டிரைவருக்கு இடையூராகப் பேசாதீர்” என்று ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. பட்டுக்கோட்டையில் ஏறினால் தஞ்சாவூரில்தான் இறங்க வேண்டும் போலும். இடையில் உள்ள ஊர்கள் பற்றிப் பேசக் கூடாதாம். தமிழ் எப்படி விளையாடுகிறது!
“தொகையும் விரியும்” – வேற்றுமை உருபு விரிந்து வரும்போது என்று எழுதியுள்ளீர்கள்?

விரிந்து வருதல் என்றால் என்ன என ஓர் அன்பர் வினவினார்.
– தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்)
– விரி எனில் விரிந்து வருதல் (வெளிப்படையாக வருதல்) மறைந்தும் வெளிப்படையாகவும் வரும் என்றால் விளங்கவில்லையே! எவை அப்படி வரும்?
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து.
இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார்.

“வீடு சென்றான்” எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள்.
இதில் “கு” எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம்.

வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது இது வேற்றுமை விளி.

எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல் – இது வினைத் தொகை.
நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும்.

எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல – எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது.

செந்தாமரை – இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம்.

கபில பரணர் வந்தார்.
இது கபிலரும், பரணரும் வந்தார்கள் என்று விரியும்.
உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.
“உம்” வெளிப்பட்டு நின்றால் அது விரி.

புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும்.
போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை.

தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

தமிழ் வளரும்..