சிங்க நாள் – ஓகஸ்ட் 10

377

ஆகஸ்ட் 10ம் தேதி உலகின் சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

திறந்த புல்வெளி காடுகளின் அழிவினாலும், கடுமையான வேட்டையினாலும் ஆப்பிரிக்க சிங்க இனங்களின் அழிவை தடுக்க மக்கள் விழிப்புணர்வு அடைய கென்ய வனவுயிர் ஆர்வலர்களின் முயற்சியால் கடைப்பிடிக்கப்பட்ட நாள் பின்னர் அமெரிக்கா அங்கீகரித்து இப்போது உலகம் முழுவதும், உள்ள சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைப் பிடிக்கப் படுகிறது.

உலகம் முழுவதிலும் ஒரு நூற்றாண்டுக்கு முன் இரண்டு இலட்சத்திற்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் இருபது ஆயிரமாக சுருங்கி விட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் ஐநூறுக்கும் குறைவாகவே உள்ளது.

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப் படுகிறது. உதாரணமாக சிங்கராசா, சிம்மாசனம், சிம்ம சொப்பனம், சிங்கத்தின் பங்கு என்று பல சொற்களை குறிப்பிடலாம்.

ஆற்றலின் அடையாளமாகவே சிங்கம் கருதப் பட்டது. எனவேதான் தெய்வங்களின் காலடியில் சிங்கம் இருப்பதாக சித்தரிக்கப் பட்டது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் துவங்கி ஐரோப்பிய மண் வரை இந்த கருத்து இருந்தது.

ஹெர்க்குலிஸ் கதையில் கூட அழிந்து போன இனமான குகை சிங்கத்துடன் போராடி அதன் தோலை உடுத்தி இருந்தான் என்பார்கள்.

பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிக கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே இவைகளின் அழிவுகள் துவங்கி விட்டன. நாடு விட்டு நாடு அரசர்கள் மேற்கொண்ட போர்களில் பயணம் செல்லும் வேளைகளில் அழிக்கப்பட்ட சிங்கங்களும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறை பிடிக்கப்பட்டு கொன்றழிக்கப் பட்ட சிங்கங்களும் எண்ணிக்கையில் அடங்காதவை.

உலகில் சிங்கங்களின் இனங்கள் ஆப்பிரிக்கச் சிங்கங்கள், ஆசிய சிங்கங்கள் என இரு பெரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இப்போது ஆப்பிரிக்க இனத்தில் ஏழு உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே எஞ்சி உள்ளது.

ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்கள் முறையே

1, பார்பெரி சிங்கம் – இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டது. இவைகள் இப்போது காடுகளில் முழுமையும் வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் மிஞ்சி உள்ளன.

2, செனகல் சிங்கங்கள் என்னும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள் உலகில் அழிவின் விளிம்பில் உள்ளன.

3.காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனங்கள் காங்கோவின் ஒரு தேசிய பூங்காவில் பராமரிக்கப் பட்டு வருகின்றன.

4, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள் எனப்படுவதே உலகின் பெரும் சிங்கங்கள். நன்றாக வளர்ந்த ஆண் சுமார் பத்தடி நீளம் இருக்கும்.

5, மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள் என்பவையே சிங்க இனத்தில் மிக அழகானவை என்று கருதப்படுகிறது. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் அவைகளை தனியாக அடையாளப் படுத்தும். பொதுவாக இவ்வகை சிங்கங்களே சமவெளிகள் அல்லாத மலைகாடுகளில் இரண்டாயிரம் அடி உயரத்திலும் காணப்படும்.

6. கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள் இவைகளும் மசாய் சிங்கங்களை போன்றே மிகப் பெரியவை. இவைகள் தென்னாப்பிரிக்காவில் பெரும் எண்ணிக்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

7. எத்தியோப்பிய சிங்கங்கள் இவைகள் வெகு சமீப காலத்தில் தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்காபிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டது. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.

இவை ஏழு வகைகளை தவிர துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளது. இப்போது நமது நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகி விட்டாலும், அவை தனிச் சிறப்பு பெற்றவை. அவைகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பல உள்ளன.

அவைகள் எதிர் பாராத தொற்று நோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க அரசு அவைகளை வேறு இடங்களுக்கும் மாற்றுவதை பற்றி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வனவுயிர்கள் ஒரு நாட்டின் பெரும் செல்வங்கள். அரசும், மக்களும் அவைகளை காப்பதன் மூலம் இயற்கையின் சமநிலையை நிலை நிறுத்தி நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற வாழ்விற்கு தேவையான பெரும் செல்வங்களை பெறலாம்.

– இறகுகள் ரவீந்திரன்