நாளொரு குறள் பொருளுடன் – 80

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :10

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

என்னுயிர் நீதானே.. உன்னுயிர் நான்தானே

யாருக்கு எதன் மீது அன்போ அதன் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார் என்கிறோம்.

மனிதனின் உயிர் அன்பின் வழியில் செல்கிறது.

அன்பு அதிகம் யாரிடன் உள்ளதோ அவர் மிகுந்த மனவலிமை உள்ளவராகிறார்.

காந்தி, விவேகானந்தர் ஆகியோர் அதை ஆன்மபலம் என்பர்.

தவம் செய்து ஆன்ம பலத்தை அதிகரித்தல் என்பதும் இதுதான். மற்ற அனைத்து உணர்வுகளையும் குறைத்து பூரண அன்பை மனம் நிறையக் கொள்வதால் பெருகும் ஆன்ம சக்தியே தவபலன் எனப்படும்.

காந்தியின் ஆயுதம் அஹிம்சை என்பார்கள். அஹிம்சை என்னும் அந்த வாள் அன்பு என்னும் இரும்பால் செய்யப்பட்டது.

உயிர் என எளிதாக சொல்லி இருக்கலாம். ஆனால் உயிர் நிலை என சொல்லக் காரணம் என்ன?

உயிர்கள் நிலை பெற என்று விரிக்க வேண்டும்.

இவ்வுலகில் உயிர்கள் நிலைபெற்று வாழவேண்டுமானால் என அது மேலும் விரியும்.

உலகில் இன்று பலவகை உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போயின. பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

அழிவின் விளிம்பில் உள்ள அந்த உயிரினங்களை நிலைப்படுத்த நாம் கொள்ள வேண்டிய வழி – அன்புதான்.

அவ்வுயிர்கள் மேல் அன்பு கொள்வோம். அவற்றின் வாழ்வை நிலைப்படுத்துவோம்.

இனப்பெருக்கத்திற்கான உணர்வாக இறைவன் காதல் என்னும் அன்பைப்படைத்தான்.

அதன் காரணமும் இதைச் சொல்லத்தானோ?