நாளொரு குறள் 47

173

நாள் : 47
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :7

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இதுவரை இல்லற வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து அதன் பெருமையைச் சொன்னவர், இல்லற வாழ்க்கையை மேற்கொண்டவனின் பெருமையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.

உலகில் எத்தனையோ முயற்சிகள் உண்டு. முயற்சிப்போர் உண்டு. இமயத்தை அளந்தவர்கள், கடலைக் கடந்தவர்கள், சந்திரனைத் தொட்டவர்கள் என எத்தனையோ முயற்சிகள் உண்டு.
இத்தனை முயற்சிகள் செய்பவர்களில் தலைசிறந்தவன் இல்லற வாழ்க்கையை அதன் இயல்பான அன்பும் அறமும் கொண்டு வாழ்வதே என்கிறார் வள்ளுவர்.

கேட்பதற்கு கிண்டல் போலத் தோன்றலாம். அந்த முயற்சி எங்கே? இந்த முயற்சி எங்கே? எதை எதற்கு ஒப்பிடுவது? என கேலி செய்யத் தோன்றலாம்.

ஆனால் யோசித்துப் பாருங்கள். அனைத்து சாதனைகளுக்கும் பின்புலமாக இருப்பது சமூக அமைப்பு என்ற அஸ்திவாரம்.

சமூகம் என்ற ஒன்று இல்லையெனில் மனிதனுக்கு இரைதேடவும், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமே நேரம் போதாது, இதில் எங்கே சாதிக்க?, எதை முயற்சிக்க?

அந்தச் சமூகம் என்பது அமைவதே இல்லறத்தால் மட்டுமே!!

ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் பிறரால் ஆக்கப்பட்ட எதையும் தொடக் கூடாது.

மரம் தேடிப் போங்கள், கனிபறியுங்கள் உண்ணுங்கள். மர நார் உரித்து ஆடை நெய்து பாருங்கள். தண்ணீர் தேடி ஆறு குளங்களுக்குச் செல்லுங்கள். அதை அள்ளிக் குடித்து தாகம் தணியுங்கள். முடிந்தால் ஒரு மண்பானை செய்ய முயற்சி செய்யுங்கள். தீப்பெட்டி கூடாது. நெருப்பை உண்டாக்க முயற்சி செய்யுங்கள்.

தானியங்கள் சேகரித்து சுத்தம் செய்யுங்கள்.

இயலுமா? நிஜமாகவே இத்தனைக்கும் பிறகும் எவரெஸ்டில் ஏற முனைப்புதான் இருக்குமா?

சமூகம் என்னும் இல்லறத்தார் அத்தனையும் எளிதாக்கித் தந்ததால் தானே முயற்சியும் வெற்றியும்.

ஆக இல்லறம் கொண்டு அதன் இயல்பான அன்புடன் அறத்தைச் செய்பவன் பெயரில் ஒரு சாதனையின் பெயரும் இருக்காது. ஆனால் அத்தனைச் சாதனைகளிலும் அவனின் பங்கு இருக்கும்.

ஆகவே ஒரு சாதனையும் தன்பேரில் இல்லாமல் எல்லா சாதனைகளுக்கும் உதவ முயற்சிப்பது என்பது எவ்வளவு பெரிய முயற்சி தெரியுமா?

சாதனை புரிந்தோர் தன் சாதனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதைக் கண்டு கண்கலங்குவோர் உண்டு.

ஆனால் அதுதான் சரி என்பதை இக்குறள் அழகாக விளக்கி விட்டது இல்லையா?

சாதரண மக்கள் சாதனைக்கு உதவுவதாலேயே திறமையுள்ளவன் சாதிக்க முடியும்.

அத்தகைய இல்லறத்தை பெருமைப்படுத்தி வாழ்வோம்.