நாளொரு குறள் – 42

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :2

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை..

அனைத்தையும் துறந்தவர்களும் உண்டு… அனைவராலும் துறக்கப்பட்டவர்களும் உண்டு. துறந்தார் என்னும் ஒரு சொல் இருவரையும் ஒரு சேர சொல்லி விடுகிறது.

துவ்வாதவர் என்றால் இயலாதவர் என்று பொருள். இயலாமையின் காரணம் பல இருக்கலாம். வறுமை, ஊனம், முதுமை, மிக இளமை, அறியாமை இப்படி எவ்வளவோ காரணங்களால் துன்பமின்றி வாழ இயலாதோர்.

இறந்தார் என்று ஒரு வார்த்தை இங்கே மிக அருமையாகப் பொருத்தப்பட்டிருகிறது. பலரும் இதை இருவகையாகச் சொல்கின்றனர். இந்து மதத்தவர் இதனை இறந்தவர்கள் ஆன்மாவிற்கு செய்யும் பித்ரு காரியங்கள் என்பார்கள். மணக்குடவர் போன்றோர் திக்கற்றவர், வாழ வழியில்லாதோர் என்பார்கள்.

இல்லற வாழ்க்கையில் இருப்பவன் இயல்பில் உள்ள மூவருக்கு முன் செய்யுளில் துணை என்றார் வள்ளுவர். பின் செய்யுளில் சொல்வது இயல்பற்ற நிலையில் உள்ள மூவரைச் சொல்கிறார் என்பதை கவனத்தில் கொண்டால் செய்யுளின் சிக்கல் தீர்ந்து விடும்.

வாழவழி இல்லாதோர் மூவர், மற்றவரால் கைவிடப்பட்டவர், இயலாதோர், மரணம் அணுகியவர்.

முன் செய்யுளில் இல்வாழ்வோன் அவர்கள் நல்வழியில் செல்ல ஏதுவாக ஆதரிக்க வேண்டும் ஒரு நிபந்தனை சொன்னார். அவர்கள் நல்வழியில் செல்ல மட்டுமே ஆதரவு.
ஆனால் இச்செய்யுளில் உள்ள மூவருக்கும் எந்த நிபந்தனையுமின்றி துணை நிற்கவேண்டும் என்கிறார். இதனாலேயே இதை இரண்டாக பிரித்து சொன்னார்.

வாழ இயன்றோருக்கு நல்ல விஷயங்களுக்குக் கைகொடுங்கள்.
வாழ்க்கையே போராட்டமாய் இருப்போருக்கு நிபந்தனையின்றி உதவுங்கள்.