ஒருவர் உயர்ச்சிக்கு முயற்சிக்கும் போது, அவரின் ஊக்கத்தைக் கெடுக்கும் விதமாக, “என்னதான் செய்தாலும் அவரைப் போல வரமாட்டாய்; இவரைப் போல ஆகமாட்டாய்; உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை.” என்ற பொருள் பட “உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்ற பழமொழியைப் பயன்படுத்துவர்.
இன்னும் சிலரோ, சாதீயத் திமிருடன் இப்பழமொழியைப் பயன்படுத்துவதும் உண்டு. ஏற்றத் தாழ்வு தொன் தமிழரிடம் இருந்ததில்லை. அது இடையில் புகுந்த பார்ப்பனியத்தின் திணிப்பாகும். அத்திணிப்பின் வெளிப்பாட்டால் இப்பழமொழி திசை மாறி எய்யப்படுகிறது. அதில் கொய்யப்படுவது என்னவோ மனங்கள்தான். அந்த ரணங்களைத் தவிர்க்கும் பொருட்டுப் பழமொழியின் உண்மைக் கருத்தை நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.
“நிலை உயரப் பணிவு கொள்” என்பதைக் கருத்தோட்டமாகக் கொண்டதே இப்பழமொழி ஆகும். “என்னதான் நிலை உயர்ந்தாலும் நீ நீயாக இரு; பெரிய ஆள் என்று தலைக்கனம் கொள்ளாதே” என்பதே இப்பழமொழியின் பொருளாகும்.