மீண்டும் மிடுக்குடன் வரலாறு திரும்பக்கூடும்.

வயவையூரில் அவதரித்த பிரபல வழக்கறிஞர் வல்லிபுரம் இராசநாயகம் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கடலில் வீசியெறிந்தார்கள் கடைந்தெடுத்த காடையர்கள் அன்று.

ஐம்பதுகளின் பிற்காலத்தில் கொழும்பு காலிமுகத்திடலில் தமிழ் பேசும் மக்களுக்காய் அறவழியில் (சத்தியாக்கிரகம்) போராடினார் என்பதற்காய் அவருக்கு சிங்களம் அந்தத் தண்டனையைக் கொடுத்தது.

அந்த அறவழிப் போராட்டத்தில் வேறு சிலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்றாலும் இந்தக் கதையை சின்னண்ணாவுக்கும் அடியேனுக்கும் சொல்லும் போது அம்மா அழுதார்.

எங்கள் அம்மாவின் அழுகைக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தது.

ஒன்று அறவழிப் போராளியான அமரர் இராசநாயகம் நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியிலே அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

சின்னஞ் சிறிய வயதிலேயே இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆனாலும் ஆயிரம் ஆயிரம் சோதனைகள் வேதனைகள் தாண்டிப் படித்துப் பட்டம் பெற்ற ஞானவான் ஆவார்.

அவர் ஒரு மாற்றுத்திறனாளி (differently abled) என்பதைத் தெரிந்து கொண்ட போதும் சிங்களகாடையர்கள் அவரைத் தாக்கிக் கடலில் தூக்கி வீசி எறிந்தமை அம்மாவைப் பெரிதும் பாதித்து பின்னாட்களில் அழுகையாய் வெளிப்பட்டது.

இரண்டாவது காரணம் இந்த வல்லிபுரம் இராசநாயகம் அவர்கள் அம்மாவின் பெரும் பாசத்துக்குரிய பெரிய தந்தை என்பதால் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் எம்முன் அன்று ஆறாகியது.

தமிழர் தாயகம் எங்கும் ஶ்ரீ லங்காவின் முப்படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட
பேரழிவுகள் மற்றும் வயவையூரின் தொடர் இடப்பெயர்வுகளைத்
தொடர்ந்து வந்த பேரவலங்கள் யான் தீவிர பொதுவாழ்வில் அடியேன் இறங்குவதற்கு காரணங்களாய் அமைந்தன.

ஆனாலும் யான் தீவிர பொதுவாழ்வில் குதிப்பதற்கு பிள்ளையார் சுழிபோட்டது அம்மாதான்.

அம்மாவை அறியாமலே அம்மா இட்ட
மங்கலகரமான பிள்ளையார் சுழி
இது ஆகும்!

அண்ணளவாக இரண்டு தசாப்த காலம் நடைபெற்ற தியாக வேள்வியில் யான் பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் இராமர் அணைக்கு அணிலின் பங்களிப்பினைப் போன்று எதையோ செய்யக் காரணமாய் அமைந்த விடையம் அறவழிப் போராட்டத்தின் மீதான அடாவடித்தனமும் ஆகும்.

ஆம்,

தையிட்டியில் பொதுமக்கள் காணியில் விகாரம் எடுத்த விகாரைக்கு எதிராக
அறவழியில் போராடிய மானமிகு கஜேந்திரன் அவர்களுக்கு நடக்கும் கொடுமையினை யாரோ ஒரு சிறுவன் ஏதோ ஒரு மூலையில் இருந்து நிச்சையம் பார்த்துக் கொண்டுதான் இருப்பான்!!!