சாமரம் வீசும் சாலையோரச் சோலையை உருவாக்கிய அருமாந்தர்!

பசுமையையும் பழமையையும் போற்றிடும்
திருமிகு நவரத்தினம் குணரத்தினம் அவர்கள் எங்கள் பெருவிருப்புக்குரிய மிக நல்ல மனிதர்.

வளம் பல கொண்ட வன்னி வாழ்வின் கடினங்களை நெஞ்சுரத்துடனும் “இந்த மண் எங்கள் சொந்தமண்” என்ற தீராத வாஞ்சையுடனும் ஆத்மார்த்தமாக ஏற்றுப் போற்றியே வாழ்பவர்.

ஆம்,அந்த மண்ணின் போரியல் வாழ்வினை வரமாக ஏற்றிப் போற்றிய நெடுந்தகை திருமிகு குணரத்தினம் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் அவதரித்த தொழிலதிபரான இவர் மாங்கனித்தீவின் பிரபலமான கல்லூரியில் கல்வி பயின்று ஓர் உயர்நிலையை அடைந்து எம் சமூகத்தை நன்னெறிக்கு இட்டுச் செல்பவர்.

நற்செயல்களால் தன் சகமாந்தரைத் தாலாட்டிய எங்கள் மாமருத்துவர் தி.கெங்காதரன் மற்றும் எந்தையைப் போலவே எந்தன் நெஞ்சில் இடம்பிடித்துள்ளார்.

பொது வாழ்வில் யான் சந்தித்த இவரை “குணரத்தினம் அண்ணா” என யானும் எனது நண்பர்களும் உரிமையோடும் உயர் மதிப்போடும் குன்றிடாத வாஞ்சையோடும் அழைப்போம்.

கோணாவில், அக்காராயன், வன்னேரி ஆகிய பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து யாம் சேவை செய்த நாட்களில் இவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

முள்ளிவாய்க்கால்,வாகரை அவலங்கள் நடந்தேறிய காலகட்டத்தில் காத்தல் கடவுளர்களாக கிரிவலம் வந்த அனைவரும் இவரது நண்பர்களாக இருந்தனர்.

மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் காந்தன் (வீரச்சாவு), மருத்துவர் ஜோன்சன்,மருத்துவர் தூயவன் ஆகிய எனது தோழர்கள் மனதிலும் நீங்காத இடம்பிடித்தவர்.

சுற்றுச்சூழல், சுற்றுச் சூழற்சுகாதாரம் தொல்லியல், பழந்தமிழர்தம் வாழ்வியல் தொடர்பில் உரையாடுவது வழக்கம்.

சாலையோரச் சோலையை அக்கராயன் யூனியன்குளம் எனும் இடத்தில் நாட்டிய இவர் மாங்கனித்தீவில் மட்டுமல்ல பாரெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களால் வியந்து பேசப்படும் ஒருவர் ஆவார்.

காற்றைச் சலவை செய்யும் மரங்கள் தொடர்பான ஏட்டறிவும் பட்டறிவும் கொண்ட பெட்டகமாக திகழும் இவர் இந்தச் சோலையில் நாட்டிய மரங்கள் இரண்டு வகைப்படும்.

01) வாகை
02) சமண்டலை

பழந்தமிழனின் அழகிய கால் தடங்களையும் தேடிப் பயணப்பட்ட இந்த தொழிலதிபராகிய இவர் மன்னன் அக்கராயன் ஆண்ட அக்காராயன் பகுதியில் அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

போர்ப்பறை செவிப்பறை கிழியக் கிழியக் கேட்டுக் கொண்டிருந்த இரண்டாயிரதொன்பதாம் ஆண்டு(2009) போர்வலயத்திலிருந்து பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் பல இருந்த போதும் பாராச் சிலுவை சுமக்கும் தன் மக்களோடு இறுதி வரை நிமிர்ந்து நின்றார்.

 

முள்ளிவாய்க்கால் காலத்தில் எங்கள் வைத்தியசாலைகள் போர்க்களமாக மாறியிருந்த நேரம் எறிகணை மழையின் மத்தியில் நிமிர்ந்து நின்று நோயாளர்களைத் தூக்கி பாரமரிப்புச் செய்த ஒரு அருமாந்தர் இவர்.

 

அந்த கடினமிகு காலங்களில் எம்மோடு வாழ்ந்தாலும் இறுதி நாட்களில் இவரை அடியேன் காணவில்லை.

நெடுநாட்களாக நிறைய மாந்தரிடம் இவர் தொடர்பில் விசாரித்தேன்.

எந்த தொடர்பும் இல்லாததால் இறுதி யுத்தத்தில் இவரையும் இழந்துவிட்டோமோ என நினைத்து வாடியதும் உண்டு.

ஆனால்,

யாழ் யாத்திரிகள் எனும் ஓர் அரிய காணொளி மூலம் இவரின் திருமுகத்தை யான் காணக் கிடைத்தமை பெருமகிழ்ச்சி அளித்தது.

அக்காராயன் சாலையோரச் சோலையை
உருவாக்கிய குணரத்தினம் அண்ணாவுக்கு முதற்கண் நன்றிகள்.

அஃதே,

காணொளி மூலம் இவரின் இருப்பினை தெரிவித்ததன் மூலம் தெம்பு தந்த “யாழ் யாத்திரிகள்” குழுவினரும் பாராட்டுதலுக்கு உரித்தானவர்களே!🥰

தொடரும்…

– அறத்தலைவன் –