சந்திர விம்பம் – மாவீரத்தின் ஒரு படிமம்.

கிளி/முரசுமோட்டைப் பகுதியில் அமைந்திருந்த கள வைத்தியசாலை மீது
நடாத்தப்பட்ட தாக்குதலில் மேஜர் சுசில் (சந்திரன்) வீரச்சாவு அடைந்தான்.

01/02/1998 அன்று நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தவர்களான மேஜர் கமல்மாஷ்ரர், மேஜர் திவாகர், மேஜர் எஷ்தர்,மேஜர் றோகினி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கம்.

“மீனகங்களை”யும் “தேனகங்களை”யும் கொண்டது தமிழர்தம் மட்டக்களப்பு மண் ஆகும்.

அந்த மண்ணில் அஞ்சல் திணைக்களத்தில் பிரதம தாபலதிபராக மக்கள் தொண்டாற்றிய அமரர் சோமசுந்தரம் அவர்களின் தலைமகனாக எங்கள் சுசில் அவதாரம் எடுத்தான்.

சின்னஞ் சிறு வயது முதல் க/பொ/த உயர்தரம் வரை கல்வி,கேள்விகளில் ஒரு வித்தகனாகவே விளங்கியவனான்.

கணிதம்,விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி அடைந்து தனது பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் மங்காப் புகழைத் தேடிக் கொடுத்தான்.

அஃதே,

கா.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவினைத் தேர்ந்தெடுத்து ஆர்வமுடம் கல்வி கற்றான்.

கல்வி வளமும் மங்காத புகழும் கொண்ட அந்தக் குடும்பத்தில் மூத்த ஆண்மகனாகிய சுதர்சனுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தார்கள்.

தந்தைக்கு அடுத்தபடியாக குடும்பத்தின் பொறுப்பினைத் தாங்க வேண்டியவன் என்பதை சிரமேற் கொண்டு மனதினை ஒருமுகப்படுத்தி கடுமையாக படித்தான்.

இடையிடையே வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய சின்னஞ் சிறிய வேலைகளையும் செய்த வண்ணம் படித்துக் கொண்டிருந்தான்.

எழுபதுகளின் (70s) முற்பகுதியில் கல்வித் தரப்படுத்தல் (Policy of standardisation) எனும் கொள்கையை நன்கு திட்டமிட்டு தமிழினத்தின் தலையாய மூலதனமாகிய கல்வியில் கத்தி வைத்த சிங்களப் பேரினவாத அரசு தொண்ணூறுகளில் (90s) தமிழர்களின் பாடசாலைகளில் புதிய இராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது.

இராணுவ முகாமாக மாற்றப்பட்ட பாடசாலைகளைவிட மீதமான பாடசாலைகள் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்விடமான போது சுதர்சன் எனும் இந்த இளைஞனும் கையில் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ் நிலைக்கு மெல்ல மெல்ல தள்ளப்பட்டான்.

01)சத்துருக் கொண்டான்படுகொலை

02)வந்தாறுமூலை படுகொலை

03)வீரமுனை சிந்தாமணி பிள்ளையார்
ஆலயப்படுகொலை

04)இறால் பண்ணை படுகொலைகள்

தொடராக தமிழர்தம் தேசிய ஆன்மாவினை உலுக்கிய போது அப்பெரும் துயரினைக் கண்டு இந்த இளைஞனும் குமுறினான்.

எங்கள் குமுகாயத்தின் துயர் துடைக்க தன்னையும் ஒரு புலியாக இணைத்துக் கொண்டான்.

மட்டக்களப்பு மண்ணின் அடர்ந்த அடவிகளில் அடிப்படைப் பயிற்சிகளும் தொடர்ந்து கடுமையான போர்ப் பயிற்சியும் (CC commanders) பெற்றான்.

பயிற்சிகள் நிறைவு பெற்ற அடுத்த வாரமே கன்னிப் போர்க்களம் ஆடித் தன் முத்திரையை செங்களங்களிலும் பதித்தான்.

ஓய்வு உறக்கம் கடிந்து தொடராய் உழைத்தான். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மண்ணில் அடுத்தடுத்த பல சமர்களங்கள் கண்டான்.

சமராடும் இவனின் அற்புத ஆற்றல்கள் கண்ட தமிழினத்தின் தானைத் தளபதிகள் இவனை மென்மேலும் புடம் போட எண்ணினர்.

மட்டு அம்பாறை மாவட்டத்தின் அப்போதைய விசேட தளபதி மற்றும் ஏனைய தளபதிகளும் மேஜர் சுசில் மேலதிக போர்ப்பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வழிசமைத்தனர்.

1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற ஆர்.பீ.ஜீ உந்துகணை சிறப்பு பயிற்சிகள் பெற்றவன்.

திறம்பட ஆர்.பி.ஜீ பயிற்சிகள் பெற்ற இவனதும் இவனது அணியும் தலைவரின் ஆசியுடன் பல களங்களில் பங்கெடுத்தது.

“இயந்திரயானைகள்”என எம்மவர்களால் விளிக்கப்படும் யுத்த தாங்கிகள் இக்காணரும் வீரனால் அழித்தொழிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு பூநகரி மண்ணில் நடைபெற்ற தமிழர்களின் வலிந்து(Offensive) தாக்குதலில் பங்கெடுத்தவன்.

அந்தச் சமரில் கையிலும் காலிலும் பாரியதோர் விழுப்புண் அடைந்தான். எலும்பு உடைவு, நிரந்தர நரம்பு பாதிப்பு என அவனது வீரவுடல் பல பாதிப்புக்களைக் கண்டது. ஆறுமாதங்கள் படுக்கையில் வீழ்ந்தான்.

உடலின் சில பகுதிகள் ஒழுங்காக இயங்க மறுத்தாலும் உளம் சோராமல் மீண்டும் மிடுக்குடன் எழுந்தான்.ஆனாலும் அவனால் முன்னரைப் போல நீண்ட தூரம் ஓடுதல்,பாய்தல் போன்ற பயிற்சிகளைச் செய்து மீண்டும் ஆயுதம் ஏந்திப் போரிட அவனது உடல் உடனடியாக ஒத்துழைக்க மறுத்துவிட்டது.

1994 ஆம் தலைமைச் செயலகத்தின் பணிப்புக்கு அமைய அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதியால் சுசில் எனும் இவ்வீரன் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

தமிழீழ மருத்துவக் கல்லூரி அன்னை புத்திக்கூர்மையும் கற்றலில் ஆர்வமும் கொண்ட இவனை அணைத்துக் கொண்டாள்.

மருத்துவக் கல்லூரியில் காலையில் ஆரம்பமாகும் விரிவுரைகள் மாலை வரை தொடரும் போது தொடர்ச்சியாக கதிரையில் உட்கார முடியாதவாறு துன்பப்படுவான்.

தொடை என்பின் பாரிய முறிவும் அதனை அண்டிய அசாதாரண இழையங்களின் வளர்ச்சியின் காரணமாய் அவனால் தொடர்ச்சியாக உட்காரமுடியாத நிலைக்குத் தள்ளியது.

ஆதாலால், விரிவுரையாளர்களின் அனுமதி பெற்று எழுந்து நின்றவாறு
கற்கத் தொடங்கினான்.

விரிவுரைகளின் இடைவேளைகளிலும் மாணவர் விடுதியிலும் இவனுக்கு உதவி செய்ய முன்வரும் எனது நண்பர்களையும் என்னையும் கோபித்துக் கொண்டு தனது கடமைகளை தானே செய்யும் ஓர்மமும் கொண்டிருந்தான்.

தொடரும்…………..

அதுவரை உந்தனுக்கு
எந்தன் வீரவணக்கம் வீரனே! 🏹

வலியுடனும் வலிமை தரும் நினைவுடனும் …. ⚔️⚔️⚔️⚔️

– வயவையூர் அறத்தலைவன்!