யானைகள் நாள் – ஓகஸ்ட் 12

577

ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம். யானைகள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் பெற வேண்டும் என்ற கருத்தில் இத்தினம் கடைப் பிடிக்கப்படுகிறது.

காடுகளில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து அட்டகாசம் செய்யும் ஒரு பேருயிர்க்கு ஒரு தினமா? என்று வியக்கும் வாசகர்களுக்கு ஒன்று சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த உலகில் பரிணாமத்தில் மிகக் கடைசியில் தோன்றிய உயிர் மனிதன். அதன் முன் இருந்து வாழ்ந்து வரும் அனைத்து உயிர்களுமே இன்று வரை இயற்கையின் சங்கிலியை உடைத்தது இல்லை. அந்த செயலைச் செய்தது மனிதன் மட்டுமே. இன்று வரை இவ்வுலகில் வாழும் கரையான் முதல் யானைகள் வரை இயற்கையில் இருந்து ஒன்றைப் பெற்றால் இன்னொன்றைத் தந்தே வாழ்கின்றன. ஆனால், மனித இனம் மட்டுமே மற்ற உயிரினங்களின் வாழ்விடத்தையும், அவைகளின் உணவையும் கொள்ளையடித்து அவைகள் மீண்டும் தலையெடுக்கா வண்ணம் அழித்து வருகிறான்.

யானைகளை பிரச்சனை என்று கருதுபவர்கள் மனசாட்சியின் படி சொல்லட்டும் அந்தப் பகுதிக்கு யானை முதலில் வந்ததா, இல்லை மனிதன் முன்பு வந்தானா என்று.

குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் பாடங்களில் படிக்கிறோம். உயர்ந்த மரங்களைக் கொண்ட காடுகளினால் மட்டுமே மேகங்கள் ஈர்க்கப் பட்டு மழையை பெய்விக்கிறது என்று. அப்பேற்பட்ட காடுகளை உருவாக்குவது யார் என்று என்றேனும் பாடங்களில் படித்தோமோ என்றால் இதுவரை இல்லை.

சோலைக்காடுகளின் மரங்களின் பழங்களை பறவைகளோ, குரங்குகளோ அல்லது யானைகளோ உண்டு அதன் விதைகளை தன் ஜீரண உறுப்புக்களின் வழி செலுத்தி விதைகளின் மேற்புற ஓடு அல்லது அதன் மேல் உள்ள கனத்த தோல்ப் பகுதி நீக்கப்பட்டு சாணமாகவோ, எச்சங்களாகவோ காடுகளில் இடும் வேளைகளில் அடுத்த மழைக்காலங்களில் அவை முளைக்கும் திறன் பெற்று புதிய தாவரங்களாக முளைக்கின்றன.

ஆனால் மனிதர்களால் பதியன் இடப்படும் செடிகளில் அந்த வீரியத் தன்மை இருப்பது இல்லை. ஏன் என்றால் அவைகள் இயற்கை முறை அல்ல, செயற்கை முறைகள். இதை இவர்களால்த் தான் செய்து முடிக்க முடியும் என்பதை இயற்கையே தீர்மானித்து வைத்து இருக்கிறது. அவைகளே, யானைகளை போன்ற தாவர உண்ணிகள்.

யானைகள் நாம் நினைப்பது போல ஒரே காடுகளில் திரிந்து உணவெடுக்கும் உயிர்கள் அன்று. அவைகள் ஒரு நாளுக்கு குறைந்தது முப்பது கிலோமீட்டர் நடக்கின்றன. அது செல்லும் வழியில் மிக உயர்ந்த மரங்களை முறித்து அதன் கீழே வளரும் புதிய தாவரங்கள் வளர அவைகளுக்கு சூரிய ஒளியை பெற்றுத் தருகின்றன. ஒரு இடத்தில் உண்ணும் பழங்களின் விதைகளை காடுயெங்கிலும் சாணமாக பரப்பி காடுகளில் புதிய தாவரங்கள் உயிர் பெறச் செய்கின்றன. அதன் நுண்ணிய ஆற்றலைக் கொண்டு நீர் இருக்கும் இடம் அறிந்து ஊற்றுக்களைத் தோண்டி வறண்ட காலங்களிலும் காட்டுயிர்கள் உயிர் வாழ நீரைப் பெற்றுத் தருகின்றன.

யானையின் சாணத்தில் கிடைக்கும் செரிக்காத உணவு என்பது சுமார் பதினாறுக்கும் மேற்பட்ட காட்டுயிர்களுக்கான உணவாகும். அதாவது, சாணத்தில் இருக்கும் விதைகளை, புழுக்களை உண்ண வகை வகையான வண்டுகள் வரும். அந்த வண்டுகளை உண்ண கீரிகள், நரிகள் போன்றவை வரும். சாணத்தில் மித மிஞ்சி இருக்கும் ஊட்டச்சத்தை உறிஞ்ச பலவகை வண்ணத்துப் பூச்சிகள் வரும். சாணம் மக்கிப் போகும் போது உரமாகும். அதுவே மழை நீர் பட்டால் பலவகை காளான்கள் முளைக்க தளம் ஆகும்.

யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்போம். அதே போல காடுகளில் யானைகள் வாழும் போது அவைகள் இருந்தாலும் நூறாயிரம் பொன், அவைகள் மறைந்தாலும் காட்டுப்பன்றிகள், நரிகள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், புலிகள், பாறு கழுகுகள், முள்ளம்பன்றிகள் போன்ற பல உயிர்களுக்கு நீண்ட நாட்களுக்கான உணவாக மாறி விடுகிறது. இதை உன்னிப்பாக பார்க்கையில் யானை என்னும் ஒரு பேருயிரைச் சுற்றி ஒரு காடே வலம் வந்து வளமாக இருப்பதைக் காணலாம்.

மனிதர்களுக்கு புரியும் வகையில் எப்படி சொல்லலாம் என்றால், மனிதனின் பிரதான தேவைகளான காற்று, நீர், மரம், சூழல் கேடா வாழ்வை காடுகளின் மூலம் யானைகளே தருகிறது என்று சொன்னால் கூட மிகை இல்லை. இன்றைக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் எந்த பகுதி அதிக மழையை பெறுகிறது என்று பார்த்தால் அது கண்டிப்பாக யானைகளுக்கு மனிதர்களால் எந்த அச்சுறுத்தலும் தராத வனப்பகுதிகளாகவே இருக்கும்.

யானைகளின் மதி நுட்பத்தைப் பற்றி பேசினால் அது முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கும். அதன் சமூக வாழ்வு, அது காட்டும் அன்பு, அரவணைப்பு, மூத்தோரை மதிக்கும் குணம் என்னும் பண்புகளால் அது சராசரி மனிதனை விட நூறு மடங்கு உச்சத்தில் இருக்கும்.

இத்தனை அருமை பெருமை கொண்ட உயிரை நம்மைப் போல சிறுமைப் படுத்துவோர் எவரும் இல்லை. அத்தகைய உயிர்களை அடிமைப் படுத்தி, தார்ச்சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கும் ஈனத்தனத்தால் மனிதனின் குணமும் என்ன என்று புரிகிறது.

தவறுகளை தவறாமல் செய்து கொண்டே சென்றால் நாம் ஒருநாள் பெரிதாக அனுபவிக்க வேண்டி வரும். அந்த நாளில் தவறை திருத்த முயற்சி செய்தால் இயற்கை நமக்கு மறுவாழ்வுக்கு வாய்ப்புத் தராது. எனவே நமது பிள்ளைகளின் காலங்களைக் கருதி காடுகளையும், காட்டுயிர்களையும் பேணுவோம். யானைகளின் வழித்தடம் காப்போம். நாமும் வாழ்வோம், வாழ்விப்போம். –

– இறகுகள் இரவீந்திரன்.