ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?
ஆஸ்டெக் பழங்குடியின மக்கள் தங்கம் என்பது ‘சூரியனின் வேர்வை’ எனக் கருதினர். இது உண்மையல்ல என்றாலும், இதைத் தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம்! பிரபஞ்சத்தில் காணப்படும் கோடானு கோடி நட்சத்திரங்களை இயக்கிக் கொண்டிருப்பது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) எனும் செயல்பாடாகும். பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு அணு வகைகளே உருவாகியிருந்தன. இப்போது நாம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் அணுக்களால்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. இந்த வரிசையில், ஒரு கட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் தீபாவளி லட்சுமி வெடி போல வெடித்துச் சிதறுகிறது! ‘சூப்பர்நோவா’ என அறியப்படும் இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில் ஏற்படும் வினையின் மிச்ச எச்ச சொச்சமாகக் கிடைப்பதுதான் நாம் உட்சபட்ச உலோகமாகக் கருதும் தங்கம் (மற்றும் பிற எடை அதிகமுள்ள தனிமங்கள்)!
பூமியில் மட்டுமல்ல, அண்டம் முழுவதும் உள்ள பல கிரகங்கள் மற்றும் பால்வெளியில் அங்கும் இங்கும் சுற்றித்தெரியும் பல விண்கற்களிலும் கூட தங்கம் உள்ளிட்ட பிற தனிமங்கள் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
-விகடன் இணையத்தளத்தில் படித்ததில் பிடித்தது.