நான் என் வாழ்நாளில் காண விரும்பிய சிற்பங்களில் இதுவும் ஒன்று. சிங்கமும், யானையும் சண்டையிட்டுக் கொள்ளும் தாராசுரத்து சிற்பம்.
இன்றைய காடுகளில் யானையும், சிங்கமும் ஒன்றாக வாழவில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய பாடலின் வரிகள் அவை இரண்டும் ஒரே காட்டில் வாழ்ந்தன என்று கூறியது. எனவே அதைப் பற்றி “அரியும், கரியும்” என்று தமிழ் இந்து நாளிதழுக்கு நான் எழுதிய கட்டுரையை அனைவரும் வாசிக்க இங்கே தந்துள்ளேன். அந்த பாடலும் , இந்த சிற்பமும் வடிக்கப்பட்டது பதிமூன்றாம் நூற்றாண்டு. எனவே அப்போது சிங்கமும், யானைகளும் ஒரே காடுகளில் வசித்து இருந்து இருக்கும் என்பதை உறுதி செய்கிறது என்றே நான் நினைக்கிறேன். அவைகளைப் பற்றி நான் எழுதியது கொஞ்சம் பெரிய கட்டுரைதான். பொறுமையாக வாசியுங்கள்.
🐆🐘 கானுயிர்களை காப்போம் – இரவீந்திரன் நடராஜன். 🦁🐯
உலக புலிகள் தினம் – ஜூலை 29, உலக சிங்கங்களின் தினம் – ஆகஸ்ட் 17, உலக யானைகள் தினம் ஆகஸ்ட்- 12, தேசிய வன உயிர்கள் வாரம் அக்டோபர் 2 முதல் 8ம் தேதி வரை என நாம் இந்த உயிரினங்களைப் பற்றி வருடத்தின் ஒரு நாளில் நினைவு கொள்ள வேண்டியதின் அவசியம் என்ன? இவைகள் அனைத்துக்கும் பொதுவான விஷயங்கள் என்ன என்று பார்த்தால் இதன் விடை நமக்குத் தெரியும்.
காடுகள், ஆம் காடுகள் இந்த உலகத்தின் நுரையீரல்கள். ஈசல் போல பெருகி கிடக்கும் இந்த மனித சமுதாயமும், பிற உயிர்களும் உயிர் வாழ உயிர்வளியாம் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்ச் சாலைகள் இந்த காடுகள். தூய நன்னீரை காலம் முழுவதும் பெற்றுத் தருவது இந்த காடுகள். ஒரு புலியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழும் போது, அது சராசரியாக வாழும் நாற்பது சதுர கிலோ மீட்டர் காடு மறைமுகமாக காப்பற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பற்றப் படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.
ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும் போது அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப்பரவல் இயற்கையாய் நடை பெறுகிறது. இது போல பறவைகள், பூச்சிகள் என ஒவ்வொன்றும் தம் தம் பங்குக்கு இயற்கையோடு இயற்கையாய் இயைந்து வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இயற்கையை அளவுக்கு அதிகமாய் சுரண்டி பிழைக்கிறது.
இன்று காடுகள் அருகிக் கொண்டே இருக்க அதை காப்பாற்றும் முயற்சியில் அதைப் பற்றி எண்ணிப் பார்க்க இயற்கை ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தான் மேற்கூறிய தினங்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மை ஒன்றை கருதி மட்டுமே காடுகள் அழிக்கப் பட்டன. அப்போதைய காடுகளின் வளம் எவ்வாறு இருந்தன என்பதற்கான சான்றுகளை நம் இலக்கியங்களின் மூலம் அறிகிறோம். தஞ்சைவாணன் கோவை என்னும் அகப்பொருட்கோவை நூலில் பொய்யாமொழி புலவரால் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல் வரிகள் …
அரியும் கரியும் பொரும் நெறிக்கு ஓர் துணையாய்
அவர் மேல் சொரியும் திவலை துடைக்க……………
இந்த பாடலின் பொருள் என்ன என்றால் தலைவியை சந்தித்து விட்டுச் செல்லும் தலைவன் காடு மலைகளை தாண்டிச் நீண்ட தூரம் பயணம் செல்லும் போது அரி என்னும் சிங்கங்களும், கரி என்னும் யானைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் பகுதிகளை கடந்து செல்ல வேண்டுமே என்று தோழியிடம் கவலைப்படுவதாக விளக்கப் பட்டுள்ளது. நமது இலக்கியங்களில் மட்டும் இல்லை புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ள எல்லோராவில் இருந்து இந்தியாவின் பல கோவில்களில், அரண்மனைகளில் யானைகளும், சிங்கங்களும் மோதிக் கொள்ளும் சிற்பங்கள் உள்ளன.
ஆனால், இன்று இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஆசிய யானைகளும், ஆசிய சிங்கங்களும் சந்தித்துக் கொள்ளும் காடுகள் ஏதும் இந்தியாவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஒரு இடம் இல்லவே இல்லை என்பதே வருத்தத்திற்கு உரிய உண்மை. இன்றைய நிலையில் இந்தியாவின் மேற்கு விளிம்பில் குஜராத்தின் ஒரு மூலையில் கிர் சரணாலயத்தில் மட்டும் ஆசிய சிங்கங்கள் வாழுகின்றன. யானைகளோ அதற்கு சம்பந்தம் இல்லாமல் இந்தியாவின் தென் திசையிலும், வடகிழக்கு திசையிலும் உள்ள மலைக் காடுகளை நம்பியே வாழுகின்றன. இவைகள் இனி ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்றால் அது விலங்கு காட்சி சாலைகளில் மட்டுமே முடியும்.
இன்றைய கானுயிர்களில் உள்ள பெரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையை வைத்தே நமது காடுகளின் வளத்தை எளிதாக கூறிவிடலாம். பத்தொன்பதாம் நூற்ற்றாண்டின் ஆரம்பம் வரை நாற்பதினாயிரமாய் இருந்த புலிகளின் எண்ணிக்கை கணக்கில்லா வேட்டைகளின் மூலம் இன்று வெறும் 2226 மட்டுமே உள்ளது. புலிகளைப் போல அல்லாமல் திறந்த வெளியில் வாழப் பழகிய சிங்கங்களுக்கு அவைகளின் வாழ்க்கை முறையே எமனாகிப் போனது. மனிதர்களின் பேராசைகளினால் தொடர்ந்து கடுமையான அழிவை சந்தித்தன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் கிழக்கு ஐரோப்பா, பாரசீகம் என்று அழைக்கப்பட்ட ஈரானில் இருந்து ஈராக், பலுசிஸ்தான், இந்தியாவின் மேற்கு, மத்திய பகுதிகள் முழுவதும் பரவி நர்மதை நதிக்கரை வரை வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் இன்று வெறும் ஐநூறு சதுர மைல் பரப்புள்ள வனப் பகுதியில் முடங்கி கிடக்கின்றன. முதலாம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்களின் அழிவுகள் துவங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் பாரசீகம், மற்றும் இந்தியாவில் வெள்ளையர்களாலும், மன்னர்களாலும் கொன்று குவிக்கப் பட்டன.
இந்தியா சுதந்திரம் அடையும் வேளையில் ஜுனாகத் நாவப்பின் காப்புக்காடுகளில் மட்டுமே ஒரு சில ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவைகளின் சந்ததிகளே இன்று குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் வாழ்கிறது. 2017 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி இவைகளின் எண்ணிக்கை வெறும் 650 மட்டுமே. இதில் வேதனை என்ன என்றால் நூறுக்கும் மேற்ப்பட்ட சிங்கங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வனப் பகுதிகளுக்கு வெளி இருக்கிறது என்பதே.
இன்றைக்கு உலகின் அரிய உயிரினமான ஆசிய சிங்கங்கள் ஒரு சிறிய பகுதிகளில் மட்டும் வாழ்வதும் பிரச்சனையே. அவைகள் என்ன என்றால் ஒரே குடும்பத்துக்குள் தொடரும் இனப்பெருக்கங்கள், தொற்று நோய் அபாயங்கள், இரை விலங்குகளின் தட்டுப்பாடு, இயற்கை மாறுபாட்டால், கடும் பஞ்சங்களினால் ஏற்படும் சாவுகள் என்று பலவும் இருக்கின்றன. இதனால் ராஜஸ்தானின் ரன்தம்பூர் புலிகள் சரணாலயதிற்கும், மத்திய பிரதேசத்தின் குனோ வனவிலங்கு சரணாலயதிற்கும் ஆசிய சிங்கங்கள் சில மறு அறிமுகம் செய்விக்கப்படுகிறது. இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் இவ்வுயிர்கள் காக்கப்படுவதுடன் அந்த பகுதிகளின் வளமும் காக்கப்படும்.
ஆசிய சிங்கங்களின் நிலை இவ்வாறு இருக்க ஆசிய யானைகள் நிலைமை நாளுக்கு நாள் மனிதர்களின் வாழ்க்கை முறைகளால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் யானைகள் இருப்பதைப் போன்ற பிம்பம் நமக்கு கோவில் யானைகளை காண்பதினால் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை, ஒடிசா, ஜார்கண்ட், உத்தர்கண்டு, அஸ்ஸாம் காடுகள், மற்றும் இமயமலைச் சாரல்களில் முப்பதினாயிரம் யானைகள் மட்டுமே வாழ்கின்றன.
யானைகளின் உதவியினால் இந்த காடுகள் மட்டுமே இன்றும் இந்தியாவில் பல்லுயிர் சூழலோடு பசுமையாய் இருக்கின்றன. யானைகளைப் பொறுத்தவரை சிறு சிறு குழுக்களாக நீர் வளம் மிக்க காடுகளுக்கு இடையே வலசை சென்று கொண்டே இருக்கும். அங்கே நம் மண்ணின் மரம், செடி, கொடிகளை உண்டு தொடர்ந்து விதைப் பரவல் நடக்கச் செய்யும். யானைகளின் வலித்தடத்தையும், அவை கண்டறியும் நீர் ஊற்றுக்களையும், யானையின் சாணத்தை சார்ந்தே உயிர் வாழும் பல உயிர்கள் காடுகளில் உண்டு, ஆனால் இன்று யானைகளின் வழித்தடங்கள் முழுவதும் நகர்புற ஆக்கிரமிப்புக்கள், சாலை குறுக்கீடு, இரயில் பாதைகள், சுரங்கங்கள் என காடுகள் முழுவதும் துண்டாடப்பட்டு கிடக்கின்றன.
இதனால் யானைகள் மட்டும் அழியவில்லை. வளமிக்க காடுகளையும் நாம் அழித்துக்கொண்டு இருக்கிறோம். இயற்கையாய் யானைகளின் மூலம் நடைபெறும் விதைபரவல் தடைபடுவதால் காடுகளில் அந்நிய களைச் செடிகளின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இந்த மோசமான மாற்றங்கள் எல்லாம் நாளைய இயற்கை சூழல், தட்ப வெப்ப மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே நாம் செய்யும் தவறுகளுக்கு நமது நாளைய சந்ததிகள் பதில் சொல்ல வேண்டி வரும். எனவே எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி நம் வனத்தையும், நம் வன உயிர்களையும்
காப்போம். வாழ்வோம் … வாழ்விப்போம்.