இரு மேதைகள்  – அறிவியல் மைல்கற்கள் – 10

528

ஆக்கம் – இளசு

—————————————————-

ஹிப்போக்ரேட்ஸ்
கி.மு.460 – 380

கேலன்.
கி.பி. 130 -201.

—————————————————————-

ஹிப்போக்ரேட்ஸ்
கி.மு.460 – 380

கிரேக்கம் தந்த மருத்துவத்தந்தை ஹிப்போக்ரேட்ஸ்.

தொழுநோயா – பாவத்தின் சம்பளம்.
காசமா – அரசன் தொட்டால் தீரும்.
வலிப்பா – பேயின் பிடி.

இப்படி மூடநம்பிக்கைகள் ஆழ ஊன்றியிருந்த காலத்தில்
நோய்கள் வர பகுத்தறிவுக்குட்பட்டக் காரணங்கள் இருக்கிறது
என தைரியமாய்ச் சொன்ன மருத்துவ முதல்வர்.

மருத்துவர்கள் நோய்க்குறிப்புகளையும், நிவாரணங்களையும்
எழுதி வைத்து, வரும் சந்ததிக்கு அர்ப்பணிக்க வேண்டும்
என்ற உயரிய கொள்கையை வகுத்தவர்.

நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே உள்ள உறவு
புனிதமானது, நோயாளி சொல்லும் அனைத்தும் ரகசியமானவை
என்ற உறுதிமொழியை எல்லா மருத்துவர்களும் கடைப்பிடிக்கச் சொன்ன
கர்ம வீரர். (இன்றும் மருத்துவ மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி இது.)

ஹிப்போகிரேட்ஸ் அருளிய வாக்குகளில் இரண்டு –
முதலில் ஊறு செய்யாதிரு. (First Do No Harm)
கலை பெரியது, வாழ்க்கை சிறியது
.

இதை அடுத்து சில நூற்றாண்டுகளுக்கு – அதாவது கிபி 200 வரை
ஹிப்போகிரேட்ஸ் என்னும் ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த
அனைத்து மருத்துவக் கன்றுகளும் —
அவர்களின் மருத்துவக்குறிப்புகள் எல்லாவற்றையும்
ஹிப்போகிரேட்ஸ் எழுதிய நூலிலேயே சேர்த்துவந்தார்கள்.
அந்த ஆலமரத்தின் நிழலையும் மீறி,
ஆனால் குருபக்தியோடு ஒரு வேலமரம்
தன் வீச்சால் விண்ணை நோக்கி நிமிர்ந்தது.

அவர்தான் கேலன்.

கேலனும் கிரேக்கம் வழங்கிய சொத்துதான்.
காலம் – கி.பி. 130 -201.
பித்தம், குளிர்ச்சி, சூடு என உடல் வளத்தை பிரித்துச் சொல்லும்
முறை இவர் சொன்னது.
இது நம்மூர் சிகிச்சை முறைகளில் இன்றும் உண்டு.
(இதை முதலில் சொன்னது இந்தியாவாக இருக்கலாம் என்பது என் உள்ளுணர்வு.
விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.)

துருக்கியில் பிறந்த கேலன் மருத்துவத்தந்தை ஹிப்போகிரேட்ஸின் கோட்பாடுகளால்
கவரப்பட்டார்; அந்த அறிவுச்சுடரையும், பின்னால் வந்த மருத்துவத்திலகங்கள் தந்த
கூடுதல் ஒளியையும் உள்வாங்கி, இன்னும் சிந்தித்தார்.
சொந்தமாக மருத்துவ நூல்கள், கண்டுபிடிப்புகள், கற்பித்தல்,
இறந்த மனித உடல்களில் ஆராய்ச்சி, அது மறுக்கப்பட்டால்
விலங்குகளின் உடல்களில் சோதனைகள் என பல படிமன்கள் கண்டார்.

உடலியல் , தாவரவியல் உள்ளிட்ட அறிவுப்பாதையில் நடைபோடும் மருத்துவர்கள்
பரி சோதனைகளில் ஏன் , எதற்கு, எப்படி என
தர்க்க பூர்வ வினா எழுப்பி , பகுத்தறிவு கொண்டு செயல்பட வலியுறுத்தினார்.
இன்றைய அத்தனை மருத்துவ முன்னேற்றக்கோபுரங்களுக்கும்
இரட்டை அடிப்படை – இந்த இரு மேதைகள் நாட்டியது.

எட்டு எட்டாய் மனித வாழ்வைப் பிரிக்கச் சொன்னார் வைரமுத்து.
கேலன் நாலு நாலாய் மனிதனைப் பிரித்தார்.
மனிதனை ஊற்றுவும் திரவங்கள் நான்கு – மஞ்சள் பித்தம், இரத்தம், சீதம் (சளி), கருப்புப்பித்தம்.
அவனை பாதிக்கும் ‘பூதங்கள்’ நான்கு – நெருப்பு, நீர், காற்று, மண்.
உண்டாகும் நிலைகள் நான்கு – வெம்மை, ஈரம், குளிர்ச்சி, உலர்தல்.
வாழ்வின் பருவங்கள் நான்கு – சிறுவர், வாலிபர், பெரியோர், முதியோர்.
இவற்றை உரசும் காலங்கள் நான்கு – கோடை, வசந்தம்,கூதல், மழை.
இவற்றின் மாறும் உறவுகளால் மாறும் அவயங்கள் நான்கு – கல்லீரல், இதயம், மூளை, சுவாசப்பை.

வெறும் உத்தேசங்கள், வெற்று வியாக்கியானங்களால் கேலனுக்கு இந்த பெருமை சேரவில்லை.
அயராது சோதனைகள், தொடர்கவனிப்புகள்- அதன் விளைவுகளை அறிவார்த்தமாய் ஆராய்தல்
இவற்றால் அவர் வழங்கிய அறிவுதானம்… அடடா!

சீரணம், நரம்புகளின் உணர்வுக்கடத்தும் நுட்பம், தண்டுவடத்தின் உள்ரகசியம்,
குருதி உருவாகும் சூட்சுமம், சுவாசம், இதயத்துடிப்பு, தமனியின் நாடித்துடிப்பு..

இவை இப்படித்தான் என எல்லா ‘ மருத்துவர்களும் ‘ வாளாவிருக்க
இவை எப்படி இப்படி உருவாகின என கண்டுசொன்ன கேலனுக்கு
ஹிப்போகிரேட்ஸ் என்னும் தந்தைக்கு நிகரான இடம் தந்து —
இருவரையும் காலப்பாலம், அறிவூற்று ஆகியவை இணைக்க-
இந்த மைல்கல்லின் நாயகர்களாய் நினைவு கூர்வோம்.