கவிதை

406

கவிதை எனும் தலைப்பில் தமிழ்மன்றம் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற என் கவிதை..

<<<<<<<<<>>>>>>>>>>>>

தோல் ருசிக்கும் எச்சில் சுவையிலும்
மெத்தையில் ரசிக்கும் வெஞ்சின உதையிலும்
மார்பு திசுவிலகி கசியும் கொவ்வையிலும்
தத்தையாய் தவழும் பல கொஞ்சும் கவிதை.

காற்றுப்பட்ட புதுப்பட்டின் இசையும்
மிதக்கும் பலூனாடும் பவளவிசையும்
கற்றுத் தெளியும் செப்பின் ஓசையும்
பெற்றுதரும் பல முத்துக் கவிதைகள்.

வெற்றாக நுகர்ந்த வெள்ளி ஜதியிலும்
வேற்றாக உணர்ந்த தங்கக் கதியிலும்
நகரும் பனிச்சிலையின் பாத சந்தத்தில்
நர்த்தனமிடும் பல பூச்செண்டுகவிதை.

மஞ்சளில் குளித்து கழுத்தில் கயிறேந்தி
பிறைநுதலில் செந்நிற இரத்தினம் பதித்து
கருகயலில் வெண்ணிரத்தம் வடித்து-பிரியா
விடைபெறும்வரை பிறக்கும் பலகவிதை

பருத்தி வெடித்து பஞ்சு பறக்க
வெடித்த பருத்தி பர்வதம் ஆக
புதுக்கவிதையாகவும் மரபுக்கவிதையாகவும்
ஊற்றெடுத்து அருவியாய் வீழும் பலகவிதை.

ஐந்து பருவத்திலும் பலகவிதை பிரசவிக்கும்
பேறு பெற்ற மடந்தை இனியதமிழ்க்கவிதை.