நாளொரு குறள் – 51

நாள் : 51
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :1

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

கடவுள் – கடவுளின் கொடை மழை – மழையின் விளைவு – அறம். அறத்தின் அடிப்படை – இல்வாழ்க்கை – இல்லறத்தின் மிக முக்கிய பங்கு வாழ்க்கைத் துணை நலம்.

அதிகார வரிசை என்பது மிகச் சிறப்பான வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை என்றாவது கவனித்திருக்கிறீர்களா?

இல்லறமே வாழக்கூடிய சிறந்த வழி. அதன் முக்கியத் தேவை சிறந்த வாழ்க்கைத் துணை.

வள்ளுவரின் இந்தச் செய்யுள் ஆணாதிக்கம் மிக்கது போல் இருக்கலாம். காரணம் உண்டு – ஆள்பவன் ஆண், பேணுபவள் பெண் என அடிப்படையிலேயே தமிழ் ஆண் பெண் தொழில்களைப் பிரித்தது.

இன்றைய நிலையில் பாலின வேறுபாடுகளைக் களைந்து விட்டே இந்த பத்து குறள்களையும் நாம் படிக்க வேண்டும். குடும்பத்தை வழி நடத்துபவர், துணை நிற்பவர். ஆளுபவர், பேணுபவர் என்று பண்புகளையே ஆணும் பெண்ணுமாக்கிப் பார்க்க வேண்டுமே தவிர பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என அதை உடல் ரீதியாகப் பார்க்கக் கூடாது. தொழில் அடிப்படையில் பிரிவுகள் உடலுக்கு சம்பந்தப்படாதவை.

உதாரணமாக பள்ளி/கல்லூரி நடத்துபவன் பிராமணன். அவன் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தானங்களை மட்டுமே பெற்று வாழவேண்டும். (யாரும் ஒத்துக்க மாட்டார்கள் என்றாலும் இதுதான் இந்துமதம். கட்டணமும் கட்டாய நன்கொடையும் வசூலிப்பது இந்து மதத்திற்கு எதிரான செயல்)

அப்படி குடும்பத்தை யார் பொறுப்பேற்று நடத்துகிறார்களோ அவர் ஆண். அவருக்கு உறுதுணையாய் நிற்பவரே வாழ்க்கைத் துணை. இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு படித்தால், சரியான பொருள் கிடைக்கும்.

மனைத்தக்க மாண்புடையாள் — வீட்டிற்கேற்ற பண்பும் புகழும் கொண்டவள். இன்னின்ன குணங்கள் தேவை என வள்ளுவர் பெயர் சொல்லிச் சொல்லாமல் குடும்பத்திற்கேற்ற பண்பு என்று சொல்வதின் மர்மம் என்ன?

ஒவ்வொரு குடும்பத்திற்கும், குலத்திற்கும், இனத்திற்கும் வித்தியாசமான சிறப்புப்பண்புகள் உண்டு. விவசாயி வீடு மிகுந்த கொடைமனம் கொண்டவராக, கடும் உழைப்பாளியாக, உறவுகள், நட்புகள், அக்கம் பக்கத்தவரை அனுசரிப்பவராக இருக்க வேண்டும். பெரிய அரசியல்வாதியின் துணை, நேரம் காலம் பாராமல் விருந்தோம்பல் செய்பவராக, படாடோபம் இல்லாதவராக, அனைவருடனும் அணுகி உதவி செய்பவராக இருக்க வேண்டும். . ஆக அந்தக் குடும்பத்திற்கு எந்த குணங்கள் சிறப்போ அந்தக் குணங்கள் கொண்டவராக வாழ்க்கைத்துணை இருக்க வேண்டும் என்பதே மனைத்தக்க மாண்புடையாள் ஆகி,

தற்கொண்டான் வளத்தக்கள் வாழ்க்கைத் துணை.

அப்படி குடும்பத்திற்கேற்ற குணம் கொண்ட துணை, தன் கொண்டவரின் வளத்திற்கேற்ற வாழ்வை வாழ்பவரே சிறந்த வாழ்க்கைத் துணை.

குடும்பத்திற்கேற்ற குணம், வளத்திற்கேற்ற வாழ்வு!!!

அழகான இரு சொற்கள் போதுமே!!!…

இன்று பல மருமகள்கள் தங்கள் மாமியார் வீட்டுடன் ஒன்ற முடியாததன் காரணம் குடும்பத்திற்கேற்ற குணம் கொள்ளாததுதான்.

மருமகள் தான் புகுந்த வீட்டிற்கு பெருமை என அக்குடும்பம் கருதும் குணங்களை கைக்கொள்ள வேண்டும். அது சிக்கனமாக இருக்கலாம், அது விருந்தோம்பலாக இருக்கலாம். அது எளிமை, நேர்மை, உண்மை ஆக இருக்கலாம். பெரியவரை மதித்தலாக இருக்கலாம். குடும்பத்தின் மாண்புகளை அறிந்து அவற்றைக் கைக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த எண்ணமின்று பலருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தன் தாய் வீட்டுப் பெருமைகள் மட்டுமே சிறந்ததாக கருதுவதால் குடும்பத்தில் ஒட்ட முடிவதில்லை.

அதே போல் வளத்திற்கேற்ற வாழ்வு வாழாமல், பேராசைக் கொண்டு டாம்பீகமாக வாழ ஆசைப்படுகிறார்கள். துணைவர் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது என்ற பல்லவி மாறுவதில்லை.

பெண் பார்க்கச் செல்பவர்களுக்கு இந்த அதிகாரம் சிறந்த கையேடாக இருக்கும் என நம்புகிறேன்.