நாள் : 29
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 9
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
கோபம் எவ்வளவு நேரம் இருக்கும்? சிலருக்கு ஆயுள் முழுதும் இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள். சிலருக்கு சில மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள்.
ஆனால் குணக்குன்றுகளாய் உயர்ந்த மனிதர்களின் கோபம் கண நேரத்தில் மறைந்து விடும்.
இதை இப்படியும் பார்ப்பார்கள்.
அப்படி ஒரு கணம்தான் அவர்களின் சினம் என்றாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து காத்துக்கொள்ளுதல் என்பது மிகக் கடினமான செயல்.
காரணம் உண்டு. சினம் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் வருவதில்லை. குணக்குன்றாய் வாழும் பெரியோர்கள் எதையும் எப்படியும் சீர் செய்யலாம் என்று யோசிப்பார்களே ஒழிய எதன் மீதும் பழி போட எண்ண மாட்டார்கள்.
கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. இயலாமையின் குழந்தை. குணக்குன்றாய் விளங்கும் பெரியோருக்கு கோபம் வருமாயின் அதன் பொருள் சீர் செய்ய இயலா தவறு நடந்திருக்கிறது என்பதே ஆகும். ஆகவே அதன் விளைவுகள் மிகப் பெரியதாகவே இருக்கும்.