நாள் : 27
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 7
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
நடைமுறை வாழ்க்கையில் ஒன்றை நாம் கவனித்திருப்போம். கண் தெரியாதோர்க்கு காது மிக தெளிவாக கேட்கும்.
அவர்களால் சின்ன ஓசை கொண்டே புரிந்து கொள்ள முடியும். தொடுதலுணர்வின் மூலமே அவர்கள் படிப்பார்கள்.
ஐந்து புலன்களும் மிகக் கூர்மையாக இருக்க வேண்டும். மனிதனின் மிக முக்கிய புலன் கண். கண் நன்றாக தெரியும் பொழுது நம்மால் மற்ற புலன்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடிவதில்லை. அதனால்தான் இசையைக் கேட்கும்பொழுது கண்களை மூடிக்கொள்கிறோம். மணத்தை முகரும் பொழுது கண் மூடிக் கொள்கிறது காதும் தன் திறனைக் குறைத்துக் கொள்கிறது. யாராவது தொட்டாலே நம் கவனம் சிதறிவிடுகிறது. ஆக ஐந்து புலன்களும் ஒரே நேரத்தில் சிறப்பாய் பணி செய்வது மிக அரிதானது.
சுவை நாவால் அறிகிறோம், ஒளி கண்ணினால் காண்கிறோம், ஊறுதல் அதாவது தொடு உணர்வை தோல்மூலம் அறிகிறோம், ஓசையைக் காதால் கேட்கிறோம் மணத்தை மூக்கால் உணர்கிறோம். இவ்வைந்தையும் மிகச் சரியாக அறிந்து, ஒவ்வொரு உணர்வையும் அந்த ஒரே ஒரு புலன் மூலமே மிகச் சரியாக அறிந்து அந்தப் பொருளின் பண்பை அறியும் திறமை கொண்டவனின் கட்டில் உலகம் இருக்கும். அதாவது இந்த ஐந்து உணர்வுகளும் எவனுக்கு மிக நுட்பமாக உள்ளதோ அவனால் மட்டுமே உலகை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
ஒரு பொருளை நாம் ஒரே ஒரு புலன் மூலமே அறிந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமானால்..
உதாரணமாக, தாமரையை கண்ணால் மட்டுமே கண்டு அறியலாம். முகர்ந்து மட்டுமே என்றால் கொஞ்சம் கடினம், கையால் தொட்டு இன்னும் கடினம். சுவைத்து.. இன்னும் கடினம். காதால் கேட்டு மட்டுமே தாமரையை அறிய முடியுமா?
முடியணும். நாம் எதை அறிய தலைப்படும் பொழுதும் அதன் சிறப்பு மற்றும் இழிவுகளோடு நிறுத்தி விடுகிறோம். முழுமையாக அறியும் எண்ணம் நமக்கு வருவதே இல்லை. முழுமையாய் அறியாததால் நம் அறிவு மேலோட்டமானதாகவே இருந்து விடுகிறது.
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுபவனின் கட்டில்தான் உலகம் இருக்கும் என வள்ளுவர் தெளிவாக சொல்கிறார் அந்தக் குறளில்.