வான்புகழ் வள்ளுவம்

1595

வான்புகழ் வள்ளுவர் உலகுக்கு உவந்தளித்த முப்பால் கண்ட அறநூல் பொய்யாமொழியெனப் புகழ்பெற்ற ஈரடித்திருக்குறள் ஆகும்.

கடைத்தமிழ்க் கழகக் காலத்தில் உருப்பெற்ற பதினெண்கீழ்கணக்கு வகையைச் சேர்ந்த இவ்வறநூல் இன்று உலகமொழிகள் பலவற்றில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு உலகப் பொது மறையாகப் பிரகாசிக்கின்றது.

பொதுவாக மதச்சார்பான நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இயல்பாகும். ஆனால் மொழிசார்ந்த ஒரு அறநூல் உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவது பெருமைக்குரியதாகும்.

இன்றுவரை மொழிமாற்றம் செய்யப்பட்ட மொழி சார் நூல்களிலே தமிழுக்குரிய திருக்குறளே ஆகக் கூடிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூலென்ற பெருமையைப் பெறுகிறது.

நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் பதினான்காயிரம் சொற்களையும் கொண்டு உலகின் பொது மறையாக இந்நூல் போற்றப்படுகிறது.

உலக மக்களால் போற்றிப் புகழப்படும் எமது திருக்குறளை தமிழ் மக்களில் எத்தனை பேர் விரும்பிப் படிக்கின்றார்கள் என்ற கேள்விக்கு விடை நிச்சயமாகத் திருப்தி தருவதாக இருக்காது.

இந்நிலை மாற வேண்டும். எல்லோரும் அதனைப் படிப்பதோடு மற்றோரையும் படிக்கத் தூண்ட வேண்டும். அதற்கமையவே வயவன் இணையத்தில் நாளொரு குறள் என்ற பக்கம் பிறந்தது. இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். வயாவிளானின் பெருஞ்சொத்துகளில் ஒருவரான மதிப்புமிகு அமரர் உலகநாதன் ஐயா அவர்கள் தன் வீட்டு முற்றத்தில் வள்ளுவர் சிலை நிறுவி சில குறள்களைப் பதிப்பித்து வைத்திருந்தார். இது நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க விடயம் ஆகும்.

அதோடு தமிழர் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் தாய் மொழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்ச்சோலைகள், தமிழாலயங்கள், மற்றும் தமிழ் சார் கல்வி நிலையங்கள் அனைத்தினதுமுடைய ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இவர்களால் சிறார்களுக்காக நடத்தப்படும் திறன்காண் போட்டிகளில் திருக்குறள் முதன்மைப்படுத்தப்படுகிறது. தாயகத்தைக் காட்டிலும் புலம்பெயர் நாடுகளில் இத்திறன் போட்டிகள் சிறப்பாக நடத்தப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில் முதன் முதலில் அச்சேற்றம் செய்யப்பட்ட திருக்குறளானது, பல புலவர்களாலும் அறிஞர்களாலும் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளமை அதன் தனிச்சிறப்பைக் காட்டுகின்றது. இப்புகழாரங்களின் தொகுப்பாக திருவள்ளுவ மாலை எனும் நூல் திகழ்கின்றது.

இத்தகைய அரும் பெருஞ் சிறப்புக் கொண்ட திருக்குறளை அருளிய திருவள்ளுவர் தமிழ்க் கடவுளாகப் போற்றப்படுகிறார்.

வள்ளுவரின் திருக்குறளைக் காப்பாற்றி தமிழ் உலகுக்கு அளித்த பெருமை ஔவையாருக்குரியதே. தமிழ்க் கடைக் கழகத்தில் திருக்குறள் அரங்கேற இருந்தபோது கழகத்தில் அங்கம் வகித்த ஆரியப் புலவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இவர்களுடன் எதிர்வாதம் புரிந்து குறளை அரங்கேற்றியவர் ஔவையார். திருக்குறளோடு சேர்ந்து ஔவையின் புகழும் ஓங்குக!

நாமும் திருக்குறளைக் கற்போம்.. கற்பிப்போம்.. பயன் பெறுவோம்..