முத்துக்கள் விளைகடலால் அனுதிஸ்னமும் தாலாட்டப்படும் தமிழர்களின் மேற்கு நிலம் மன்னார் ஆகும்.
மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கிராமத்துக்குள் ஓர் நடுநிசி நேரம் அதிரடியாக நாங்கள் புகுந்தோம்.
அந்த நாள் 1998ஆம் ஆண்டு ஆகும்.வழமையான எதிரி மீது பொருதுவதற்கு அல்ல. இம் முறை அந்தக் கிராமத்துக்குள் புகுந்த கொலரா எனும் கொடிய அரக்கனை கட்டுக்குள் கொண்டு வரச் சென்று இருந்தோம்.
ஆங்கிலத்தில் Cholera (கொலரா) எனச் சொல்லப்படும் வாந்திபேதி எனும் கொள்ளை நோய் புத்தளம் ஊடக மன்னாருக்கு பரவியது.
அந்தக் கொடிய நோய்க்கிருமி ஒருவரின் உடலில் வாய்வழி மூலம் சென்றால் மிகக் குறுகிய நேரத்திலேயே நீர்த்தன்மையான
அரிசி கழுவிய நீர் போன்று
மலம் வெளியேறும்.
மலத்தின் மூலமும் வாய் வழியான வாந்தியின் மூலமும் அதிகரித்த நீர்,கனியுப்புக்கள் வெளியேற்றம் உயிரிழப்பை உண்டு பண்னக் கூடியது.
மிக வேகமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது. ஆதலால் இது ஒரு கொடிய கொள்ளை நோய் ஆகும்.
வைத்தியசாலையில் நின்று கொண்டு வெறுமனே சிகிச்சை கொடுப்பதால் பயன் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம்.
கிராமம் கிராமமாக இறங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியின் ஓர் அங்கமாக Dr. சூரியகுமாரன் தலைமையில் மன்னார் சென்றோம்.
அங்கே அந்த நள்ளிரவில் எமை வரவேற்க எவருமில்லையாதலால் அந்த ஊரின் நடுவே அமைந்திருந்த கிறிஷ்தவ தேவாலயத்தின் தாவாரத்தில்படுத்து எழுந்த போது அந்தத் தேவாலயப் பங்குத் தந்தையான வணக்கத்துகுரிய குருவானவர் எங்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.
எமைக் காக்க இனி எவரும் வரமாட்டார்கள் என ஏங்கியவாறு முதல் நாள் பின்னேரம் “புனிதர் செபஷ்ரியானை” ஊரைச் சுற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றதாகவும்
அந்த ஊரவர்கள் சொன்னார்கள்.
அதன் பயனாகவோ என்னவோ நிழலரசின் மருத்துவப் பிரிவின் சிறப்பு அணியினர் தலைவன் ஆணையுடன் அங்கே மீட்பராய் களம் இறங்கினர்.
ஆபத்து ஏதும் சூழ்ந்து கொண்டால் புனிதர் செபஷ்ரியானை ஊர்வலமாய் எடுத்துச் செல்லும் வழமை எங்கள் தமிழ்க் கத்தோலிக்கர் மத்தியில் இருப்பதை அன்று அறிந்து கொண்டேன்.
ஆம்,புனிதர் செபஷ்ரியான் அடிப்படையில் ஒரு போர்வீரன்.
தமிழர்களின் முதலாவது பெண் தெய்வமான “கொற்றவை” பெற்ற “சேயோனை”ப் போல அல்லது அண்ணன்மார் என கிராமங்களில் வழங்கப்படும் “பொன்னர், சங்கர்” போன்றவரே புனிதர் செபஷ்ரியான்.
15ஆம் நூற்றாண்டின் பின்னரான ஐரோப்பியர் வருகையுடன்
தமிழர்களிடையேயும் வணக்கத்துக்கு உரியவர் ஆனார்.
சேயோன் தொடக்கம் செபஷ்ரியான் வரை எனத் தம் வீரவழிபாட்டினைத் தமிழர்கள் எல்லையிடவில்லை.
இந்த நிலையில் மானமாவீரர்களும்
தமிழரிடையே வழிபாட்டுக்குரியர்களாகியமை ஒன்றும் புதுமை அல்ல!