உள ஆரோக்கியமும் ஆன்மீகமும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்வுக்கு உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உள்ள ஆரோக்கியத்தைப் பேண, பூசை, பிரார்த்தனை, தியானம், யோகா என வழிகளைக் காட்டுகிறது ஆன்மீகம்.
ஐம்புலனையும் அடக்கி, மனதை ஒரு நிலைப்படுத்தி, அகக்கண் திறந்து உள்ளே கடவுதலே பூசை, பிரார்த்தனை, தியானம் எல்லாமே.
பூசையின் போது காதுக்கினிய மணியொலியும், கண்ணுக்கு இதமான தீப ஒளியும், நாசிக்கு சுகமான கற்பூர வாசனையும், நாவினிக்கும் நாதன் நாமமும் இணைந்து எமது கவனத்தை ஒரு முகப்படுத்தி எனக்குள் சக்தி ஊட்டும். இதன் மூலம் உள்ளம் ஆரோக்கியம் அடையும்.
யோகா பற்றிச் சொல்லவே தேவை இல்லை. பதஞ்சலி முனிவரால் பாதுகாக்கப்பட்ட யோகாக் கலையின் போது மனமும் உடலும் ஒருங்கிசைந்து ஆரோக்கியம் அடைகின்றன.
இதே போல், விழுந்து கும்பிடுதல், அங்கப்பிரதட்சம் செய்தல், தோப்புக்கரணம் போடல், உள்வீதி வெளி வீதி சுத்திக் கும்பிடுதல் எல்லாமே ஒரு வகை உள, உடல் பயிற்சிகளே. இவையும் எமது ஆரோக்கியம் கெடா வண்ணம் காக்கின்றன.
தியானமும் ஆரோக்கியக் காப்பரண்தான். அந்தக் காலத்தில் முனிவர்களும் தவசிகளும் இயற்கை கொஞ்சும் சூழலில் தியானம் இருந்தனர். இயற்கையும் எமது அகம் கொண்ட சக்தியும் கடவுளின் இருப்பிடம் என்பதை முன்னிறுத்தி செய்யப்படும் தியானத்தால் தூய காற்று, ஆழ்ந்த சுவாசம், மன உளைச்சல் கழித்தல் எல்லாமே நடந்து ஆரோக்கியம் பேணப்படும்.
இவ்வாறு ஆரோக்கியம் பேணி வெற்றி கண்ட பலர் எமக்கு முன்னுதாரணமாகவும் பாடமாகவும் உள்ளார்கள். அவர்களில் சிலரைப் பற்றி அடுத்ததாகப் பார்ப்போம்.