“உரு” – காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் கண்மணிகளின் குடும்ப அவலங்களின் பதிவு

உருபடம் பார்க்க வாங்கோ!

ஒக்ரோபர் 13 2018
சனிக்கிழமை
1:00
&
3:00

வூட்சைட் திரையரங்கு
ஸ்கார்பரோ.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” குறித்த விடயமும் மெல்ல மெல்ல ஆறிய கஞ்சியாகி அல்லது பல சபைகளில் பல இடங்களில் “பேசாப் பொருளாகி” வருகிறது.

இன்றைய நாட்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் “உரு” அல்லது “Trance” என்ற பெயரில் குறும்படம் எடுத்துப் பெரும் விழிப்பை, பரபரப்பைத் திருமிகு ஞானதாஸ் காசிநாதர் ஏற்படுத்தி உள்ளார்.

தமிழர்கள் தமக்கான நிழல் அரசை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் சில நல்ல திரைப்படங்களை யாழிலும் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் எடுத்திருந்தார்கள்.

உதாரணமாக ‘எல்லாளன்’ திரைப்படத்தைக் குறிப்பிடலாம். தமிழக உறவுகளின் உதவியுடனும் ஓர் சில திரைப்படங்கள் ஈழமண்ணில் எடுக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக ‘ஆணிவேர்’ திரைப்படம் உள்ளது. ‘ஆணிவேர்’ படத்தில் நடிகர்களான நந்தா, மதுமிதா, நீலிமா போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

காலமும் கருத்தும் சூழலும் மாறுபட்டு எமக்கு சாதகம் அற்றதாக மாறியிருக்கும் இந்த சூழலில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ‘மீன் பாடும் தேன் நாடென’ தமிழர்கள் நாம் பெருமிதம் கொள்ளும் மட்டக்களப்பில் அதன் மண்வாசனையுடன் அற்புதமாக “உரு”வை உருவாக்கியுள்ளார்கள்.

“உரு” குறுந்திரைப் படத்தில் சிறந்த நடிப்பை ஈழத்தின் புதிய நடிகர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். ஈழத்திரைப்பட வரலாற்றில் “உரு” குறுந்திரைப்படம் ஓர் திருப்புமுனை எனக் கூறின் அது மிகையாகாது என்பது பலரின் உள்ளக் கருத்தாக உள்ளது.

திருமிகு ஞானதாஸ் காசிநாதர் அவர்களின்  “பேசாப் பொருட்களை” பேசும் வீரமும்ஈரமும், தமிழ்த்தேசியம் மீதான வாஞ்சையும் நிறையவே எல்லோருக்கும் பிடித்துப் போகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் கண்மணிகள் குறித்து புலத்திலும் தளத்திலும் உள்ள இளையவர்களின் கருத்தில் நெருப்பை விதைத்து உள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் குறித்து உலகப் பரப்பெங்கும் பேச வைத்து நீதி கேட்கிறார்!

சுதந்திரத்தைத் தேடியதால் சுதந்திரத்தை இழந்த இளைஞர்களின் உள்ளத்திற்கும் தமிழின விடுதலையே தம் வாழ்வின் இலட்சியமாக வாழ்ந்த/வாழும் மானுடர்க்கும் திருமிகு ஞானதாஸ் காசிநாதர் அவர்கள் ஓர் சிறிய ஆறுதலும் தருகிறார்.

“அப்பா/அம்மா வந்த பின் முற்றத்தில் பொங்குவோம்” என்றிருக்கும் என் தேசத்துப் பிஞ்சுகளுக்காக…,”அண்ணா வந்த பின் என் கழுத்தில் தாலி ஏறட்டும்”என்றிருக்கும் என் தேசத்து தங்கைகளுக்காக…,”மகன் வந்த பின் என் ஆவி பிரியட்டும்” என்றிருக்கும் என் தேசத்து அன்னைகளுக்காக…,“உரு”படத்தை பார்ப்பதற்கு தயாரகுங்கள்.

இப்படம் நம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்திலும், பிரெஞ்சு தேசத்திலும் திரையிடப்பட்டுவிட்ட பெருமளவு இதயங்களை தொட்டு நிற்கிறது. எதிர் வரும் 19/06/2018ஆம் தேதி மட்டுமாநகரின் சாந்தி திரையரங்கில் திரையிடப்படள்ளது. நம்மவர்கள் நலிந்து நிற்கும் நம்மவர்கள் நலன் கருதி “உரு”படத்தை பார்ப்பதற்கு தயாராகுங்கள்.

எல்லோரும் குடும்பத்துடன் செல்லுங்கள்.உறவினருக்கும் சொல்லுங்கள்!

பிறமொழி பேசும் உங்கள் நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்! சகோதர இனத்தவர்களின் மனச்சாட்சியின் கதவுகளையும் இந்த “உரு”/Trance திரைப்படம் தட்டும் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

சர்வதேச விருதுகள் பல வென்ற இந்த ஈழத்திரைப்படத்தின் பெருவெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி!🙏

TRANCE:The winner of many international awards for Human Rights.

– வயவையூர் அறத்தலைவன் –