3. புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி
இரண்டு சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதைப் புணர்ச்சி என இலக்கணம் கூறும். அவ்விரு சொற்களில் முதலில் நிற்கும் சொல் நிலைமொழி எனப்படும்; அடுத்து சேர வரும் சொல் வருமொழி எனப்படும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.
கண்ணன் + வந்தான் = கண்ணன் வந்தான்
வாழை + கனி = வாழைக்கனி
மரம் + நிழல் = மர நிழல்
சமையல் + கலை = சமையற்கலை
மேற்கூறிய எடுத்துகாட்டுகளில் கண்ணன், வாழை, மரம், சமையல் என்பன நிலைமொழிகள், வந்தான், கனி, நிழல், கலை என்னும் சொற்கள் வருமொழிகள். முதல் எடுத்துக்காட்டில், புணர்ச்சிக்குப் பின்னர் இரு சொற்களிலும் எவ்வித மாற்றமுமில்லை; எனவே இது இயல்புப் புணர்ச்சி எனப்படும். அடுத்த எடுத்துக்காட்டுகளில் புணர்ச்சிக்குப் பின்னர் சில மாற்றங்கள் தோன்றியுள்ளன எனவே இவை விகாரப் புணர்ச்சிகள் (விகாரம் என்றால் மாறுதல்) எனப்படும். இரண்டாம் எடுத்துக் காட்டில் க் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப்பின் தோன்றியுள்ளதால் இது தோன்றல் விகாரப் புணர்ச்சியாகும். மூன்றாம் எடுத்துக்காட்டில் ம் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப் பின் மறைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது; எனவே இது கெடுதல் விகாரப் புணர்ச்சியாகும். கடைசி எடுத்துக்காட்டில் புணர்ச்சிக்குப்பின் ல் என்னும் மெய்யெழுத்து ற் என்னும் மெய்யெழுத்தாகத் திரிந்து விட்டதால் இது திரிதல் விகாரப் புணர்ச்சியாகும்.
4. சந்தி
இரு சொற்கள் சேரும் போது நிலைமொழியின் (அதாவது முதல் சொல்லின்) இறுதி எழுத்தும், வருமொழியின் (அதாவது அடுத்த சொல்லின்) முதல் எழுத்தும் இணைகின்றன; அப்போது உண்டாகும் மாற்றமே சந்தி எனப்படுகிறது என்பதை ஏற்கனவே கண்டோம். மேலும், சொல்லின் இறுதியில் வரும் மொழி ஈற்றெழுத்துக்கள், சொல்லின் முதலில் வரும் மொழிமுதல் எழுத்துக்கள் எவையெவை என்பதையும் பார்த்தோம். இப்போது சந்தி மாற்றங்களைப் பற்றி அறிவோம்.
4.1. நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும் உயிர் எழுத்தாக இருத்தல் (உயிர் முன் உயிர் புணர்தல், அதாவது உயிர் + உயிர்) நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துக்கள் அமைய இரு சொற்கள் இணைவதை உயிர் முன் உயிர் புணர்தல் என்பர். அவ்வாறு இரு சொற்களிலும் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவை இரண்டையும் ஒன்றுபடுத்தும் பொருட்டு இடையில் சில மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும். அம்மெய்யெழுத்துக்கள் வ் மற்றும் ய் என்னும் இரண்டுமாகும். இரு உயிர்களை ஒன்றுபடுத்தும் மெய் என்பதால் இவற்றை உடம்படுமெய்கள் என அழைப்பர்; அதாவது வகர உடம்படு மெய், யகர உடம்படுமெய் என இவை கூறப்படும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:
அடி + இணை = அடியிணை
தீ + அணைப்பு = தீயணைப்பு
வேலை + ஆள் = வேலையாள்
கோ + இல் = கோவில் / கோயில்
மா + இலை = மாவிலை
பூ + இதழ் = பூவிதழ்
சே + அடி = சேவடி
வர + இல்லை = வரவில்லை
இ, ஈ, ஐ என்பவை நிலைமொழியின் ஈறாக வந்தால் யகர உடம்படு மெய்யும், ஓ என்பது நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர/யகர உடம்படு மெய்களும், ஏனைய உயிரெழுத்துகள் நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர உடம்படு மெய்யும் புணர்ச்சியில் தோன்றும்.